Popular Posts

Wednesday 23 April 2014

அவதாரங்களிடம் ஆறு கேள்விகள்!


அவதாரங்களிடம் ஆறு கேள்விகள்!



இந்தப் பதிவை எழுதியதற்காக என்னை நானே பாராட்டியதுண்டு. நீங்கள் போற்றுவீர்களோ தூற்றுவீர்களோ இதைப் படித்தவுடன் உங்கள் வதனத்தில் புன்சிரிப்பு மலர்வது உறுதி. பல நாட்களாகப் புதிய பதிவு எழுத என் உடலும் மனமும் ஒத்துழைக்காததால் இந்த மீள்பதிவு.




கடவுளின் அவதாரங்களிடம் ஆறு கேள்விகள்.


ஒன்று:


மனிதராகப் பிறந்த அனைவருமே, அன்றாட வாழ்க்கையில், பசி வந்தால் உண்ணுகிறார்கள்; தாகமெடுத்தால் நீர் அருந்துகிறார்கள்; உறங்குகிறார்கள்; விழிக்கிறார்கள்; காலைக் கடன் கழிக்கிறார்கள்; குளிக்கிறார்கள்; நோய் வந்தால் மருத்துவரிடம் போகிறார்கள்.


நீங்களும் வாய்க்கு ருசியாக உண்ணுகிறீர்கள்; சொகுசுப் படுக்கையில் உறங்குகிறீர்கள்; விழிக்கிறீர்கள்; மலம் கழிக்கிறீர்கள்; சிறுநீரை வெளியேற்றுகிறீர்கள்; உடம்புக்கு ஒரு கேடு வந்தால் மருத்துவரைத் தேடுகிறீர்கள.


எனவே, நான் உங்கள் முன் வைக்கும் முதல் கேள்வி............


உடல் அளவில், சாதாரண மனிதரிடமிருந்து கடவுளின் அவதாரமான நீங்கள் எவ்வாறு வேறுபடுகிறீர்கள்?



இரண்டு:


பிரச்சினைகளும் போராட்டங்களும் நிறைந்த இந்த நிலவுலகில், அற்பப் பிறவிகளான நாங்கள், கோபம், தாபம், சூதுவாது, போட்டி, பொறாமை போன்ற பல கெட்ட உணர்ச்சிகளுக்கும், சில நல்ல உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டுத் தவிப்பது மறுக்க முடியாத உண்மை.


கடவுளின் இன்னொரு வடிவமான நீங்கள், மக்களைச் சந்திக்கும் போதெல்லாம், முகத்தில் புன்னகை தவழ, விழிகளில் அருள் வெள்ளம் பொங்க நிஜக் கடவுளாகவே காட்சி தருகிறீர்கள்.


கடவுள் விருப்பு வெறுப்பு அற்றவர் என்கிறீர்கள். நீங்களோ அப்படிப்பட்டவரல்ல.


எதற்காக இந்தக் கடவுள் வேடம்?


காசுக்காகவா? காம சுகத்துக்காகவா?



மூன்று:


காமம் பொல்லாதது!


வயிற்றுப் பசியை வெல்லலாம். [உண்ணா நோன்பிருந்து மரணத்தை தழுவியவர்களை நினைவு கூர்க]. காமப் பசியை வெல்வது இயலாது; கட்டுப்படுத்தத்தான் முடியும்.


மதுவைக் குடித்தால்தான் போதை வரும் . அழகு மங்கையரை நினைத்தாலே

காமம் என்னும் போதை தலைக்கேறும்.


கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டாலும், நீங்களும் ஒரு மனிதர்தான்.


அழகழகான பெண்களைப் பணிவிடை செய்ய ‘வைத்து’க் கொண்டு, நாடி

வரும் இளம் பக்தைகளைத் தொட்டுத் தடவியும் கட்டி அணைத்தும் புதுப் புதுச் சுகங்களை அனுபவித்துக் கொண்டு, “நான் துறவறம் காப்பவன்” என்று உலகறியச் சொல்லித் திரிகிறீர்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவுமே இல்லையா?



நான்கு:


பிரபஞ்சத்தைப் பரிபாலனம் செய்வதற்கு, உயிரினங்களைக் காப்பதற்குக் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அவர் எங்கும் இருப்பவர்; தூசு, துரும்பு, அணு, அணுவுக்குள் அணு என்று அனைத்திலும் ஊடுருவியிருப்பவர் என்கிறீர்கள்.


அந்தக் கடவுள் இருக்கும் போது இன்னொரு கடவுளாக நீங்கள் எதற்கு?



ஐந்து:


நீங்கள் கடவுளின் அவதாரம்.


இந்தப் பிரபஞ்சம் எப்போதிருந்து இருக்கிறதோ அப்போதிருந்து எத்தனை முறை கடவுளின் மறு வடிவமாக அவதரித்திருக்கிறீர்கள்? இனியும் அவதரிப்பீர்களா?



ஆறு:


மண்ணில் தோன்றிய அனைத்து உயிர்களும் மண்ணோடு மண்ணாவது, அல்லது, எரித்தால் சாம்பல் ஆவது நிச்சயம்.


உங்களுக்கும் அதுதான் கதி என்றாலும்..................................................................


கடவுளின் அவதாரம் என்று பீத்திக்கொள்ளும் நீங்கள் சாகும்போது, மக்கள் காணும் வகையில் பூத உடலோடு விண்ணில் மறைந்து ஓர் அதிசயத்தை நிகழ்த்துவீர்களா?


பதில் அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்.

No comments:

Post a Comment