தமிழினத் தந்தை!
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஈரோடு நகரில் பிறந்து வளர்ந்த (பெரியார்) ஈ.வெ. இராமசாமி அவர்கள் இன்று தமிழ் நாட்டு மக்களின் வாழ்விலும் எண்ணத்திலும் ஒரு புதிய விழிப்புணர்வையும் மாற்றத்தையும் உருவாக்கி, அறிவுப் புரட்சிக்கு வழிவகுத்து, மக்கள் தன்னம்பிக்கை கள்ளச் செய்தவராக விளங்குவதால், வரலாற்றில் போற்றிக் குறிப்பிட வேண்டிய ஒரு புதிய சகாப்தம் (புதிய நூற்றாண்டு) படைத்தவர் ஆவார். எனவே, பெரியார் அவர்களின் நூற்றாண்டு, தமிழர் வாழ்வு காண முற்பட்ட நூற்றாண்டாக, தன்மானமும், பகுத்தறிவும் முளைத்துத் தழைத்த நூற்றாண்டாக, தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுவது எல்லா வகையிலும் இன்றியமையாத்தொரு எழுச்சியூட்டும் கடமையாகும்.
புதிய எழுச்சிக் கொண்ட தன்மான உணர்வும் பகுத்தறியும் மனப்பான்மையும் கொண்ட தமிழினத்தை உருவாக்கிய தந்தை பெரியார், புதிய தமிழகத்தின் – தமிழ் இனத்தின் தந்தையாவார்.
இயற்கையிலேயே சுதந்திர உணர்வு;
செல்வச் சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவராதலால், பிறர் தயவில், ஆதரவில் வாழவேண்டிய நிலைக்கு என்றும் ஆளாகாதவர் பெரியார். சிறு வயது முதலே எதையும் – தமது அறிவுக்குட்பட்ட வகையில் ஆராயும் மனப்பான்மை கொண்டவர். ஒருவகையில் இயற்கையிலேயே ‘சுதந்திர’ உணர்வு கொண்டவர். மற்றவர்கட்கு அஞ்சுவதும், அடங்குவதும், கட்டுத் திட்டங்களை ஏற்பதும் அவருக்கு இயல்பல்ல.
உலகத்தார் நம்பிக்கைகளையும், செயல்களையும் தாம் கண்டறியும்போதேல்லாம் அவற்றைக் கூர்ந்து நோக்கி, அவை ஏன்? எப்படி? எதனால்? என்னும் முறையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். தமக்குத் தோன்றும் உண்மையை மற்றவர்களிடம் உரைத்து அவர்தம் பதிலையும் ஆராய முற்படுவார்.
முறையான பளிளிப்படிப்பு முக்கியத்துவம் பெறாத காலமாகையால், அவருக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வமில்லை அதைக் கண்ட பெற்றோர்கள் அவரைத் தமது வாணிகத் தொழிலிலேயே ஈடுபடுத்தினர். அதுவும் ஒருவகையில் நாட்டுக்கே நன்மையாயிற்று எனலாம். முறையான பள்ளிப் படிப்பும் ஆசிரியரிடம் பாடம் கேட்கும் முறையும் ஒருவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடக்கூடிய ஒரு பழமைச் சுவடு அவருள்ளத்தில் பதியாமல் தப்பினார் எனலாம்.
அனுபவ அறிவு;
செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போன்று, எண்ணங்களும் மனப்பழக்கமாவதால், அந்த எண்ணங்களினின்றும் புதிய எண்ணங்களைச் சிந்திப்பது என்பது இயற்கையில் எளிதல்ல. பாடங்கேட்டுப் பழகாத அவரது மனம் புதிதாகத் தோன்றக் கூடிய எண்ணங்களைப் பழைய எண்ணங்கட்கு அடிமைப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆட்படவில்லை.
ஏட்க் கல்வியை முறையாகப் பயில்வதில் நாட்டம் செலுத்தாவிடினும், அவரது இயல்பான அறிவுக் கூர்மையால், உலகம் என்னும் விரிந்த ஏட்டினைக் கண்டு, கேட்டு, உரையாடி, சிந்தித்து, தனிவழியில் தமது கருத்துகளை – காரண காரிய விளக்க அடிப்படையிலான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளலானார்.
பின்னர் மக்கள் ஏன், பல்வேறு மூட நம்பிக்கைகட்கு ஆளாகின்றனர்? சாதி, சமய வேற்றுமைகளை ஏற்கின்றனர்? என்றெல்லாம் சிந்திக்கத் தலைப்பட்டு, அவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கைகொள்ள ஏதுவாக உள்ள இதிகாச புராண, சாத்திர ஏடுகளையும் அவராகவே படித்து அவற்றை ஆராயலானார். அவற்றில் அறிவுக்கு ஒவ்வாத, உண்மைக்கு மாறான கற்பனையும் பொய்யும் கலந்து மயக்க உணர்வு வளர்க்கும் பலப்பல செய்திகள் – கருத்துகள், இருப்பதைக் கண்டார். இந்தக் கற்பனைக் கதைகளும் – பொய்மைகளும் பாமர மக்களை மட்டுமின்றிப் படித்த மக்களையுங்கூட உண்மையைத் தெளியவிடாமல் தடுக்கின்றன என்பதையும் உணர்ந்தார். தாம் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு உணர்த்துவதே தமது வாழ்நாள் குறிக்கோளாக்க் கொண்டார்.
மக்களைத் தேடி சென்ற முதல் தலைவர்!
பெரியார் அவர்களின் அறிவுக் கூர்மையானது; சுறுசுறப்பானது; நினைவாற்றல் மிக்கது; ஓய்வை ஏற்காதது; எப்பொழுதும் எதையாவது படித்துக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ தான் இருப்பார். புதிது புதிதாக அறியக் கூடியவற்றை அறிந்து – தெளிவதிலே அவருக்குப் பேரார்வம்.
இயல்பிலேயே அவரிடம் காணப்பட்ட ஊக்கம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி, மடியின்மை ஆகயவையே, முதிர்ந்த வயதில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பின்னரும் தொண்ணூறு வயதுக்கு மேற்பட்ட நிலையிலும், பிறர் உதவியின்றி நடமாட முடியாத போதும், தமது குறிக்கோள் வெற்றிப்பெற, நாடு நகர் பட்டி தொட்டி எங்கும் மக்களைச் சந்தித்துத் தமது கொள்கைகளை எடுத்துக் கூறி விளக்கும் ‘இலட்சியப் பயணம்’ மேற்கொள்ளக் காரணமாயிற்று எனலாம். அந்தக் கடுமையான உழைப்புடன் நடத்தப்பட்ட சுற்றுப் பயணத்தில்தான் அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி, மனநிறைவு! ‘உடல்’ வலிமை இழந்து தளர்ந்த போதும் ‘அறிவு’ உரம் குன்றாமலும், கூர்மை இழக்காமலும், ‘உள்ளம்’ ஊக்கம் தளராமலும் தொண்டார்வம் தடைப்பதாமலும் தந்தைப்பெரியார் அவர்கள் ‘ஓய்வை’ விரும்பாது இந்தச் சமுதாயத்துக்காக்க் பாடிபட்டார். சுறுசுறுப்பபு இயல்புகொண்ட அவரது அறிவே அவரை இயங்கவைத்தது எனலாம். அப்படிப்பட்ட ஒருவரை ‘உலகம்’ இதுகாறும் கண்டதில்லை.
பெரியார் அவர்கள் பெற்றிருந்த செல்வத்துக்கும், செல்வாக்குக்கும், தொண்டினால் அவர் அடைந்திருந்த புகழுக்கும் அவர் இருக்குமிடந்தேடிப் பல்லாயிரக் கணக்கானவர் வருவர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகோர்க்கு அறிவுரை வழங்கி இருக்க முடியும். எந்த ஒரு ஞானியும் மடாதிபதியும் அடையாத பெருமையோடு அவ்வாறு செய்திருக்க முடியும். ஆனால் – மக்களிடத்திலே அவர் கொண்டிருந்த தாயன்பும், தாமும் மற்றவர்களைப் போன்று ஒரு சராசரி மனிதனே என்னும் எண்ணமும், தொண்டுத செய்பவன் மக்களை நாடிச் செல்வதே முறை என்னும் கருத்தும், தமது கொள்கையை எதிர்நீச்சல் முறையில் எடுத்துச் சொல்லவேண்டியிருப்பதால் தாமே – அறியாமையில் மூழ்கியுள்ள மக்களைத தேடிச் செல்வதே தமது கடமை என்னும் ஆர்வமும் அவரை அப்படிப்பட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வைத்தன.
கருத்து வேற்றுமையை மதித்தவர்;
மக்கள் பலர் தமது கருத்தினைக் காது கொடுத்துக் கேட்கிறார்கள் என்பதே அவரது களைப்புக்கு மருந்து. அவர்கள் தமது கொள்கையைச் சிந்திக்கின்றார்கள் – ஏற்க முற்படுகிறார்கள் என்பதே அவருக்குத தேன். அதுவே அவரது முதுமையில் அவர் பருகிய இளமையின் பால்.
பெரியார் அவர்களிடம் பழகியவர்கள் அறிந்தது இது. தம்முடன் உரையாடுவோரைக் கூர்ந்து கவனிப்பார். அவர்தம் உரையையும் காதுகொடுத்துக் கேட்பார். அவரது சிந்தனை தம்முடன் பேசுவோரையும் அவரது எண்ணத்தையும் ஆராயும். ஒருவர் ஏன் அப்படிப்பட்ட கருத்தைக் கூறுகிறார் என்பதை அவர் ஆழ்ந்து சிந்திப்பதை அவரது துருவிப்பார்க்கும் கண்கள் புலப்படுத்தும்.
தம்மிடம் உரையாடுவோர், ஏதேனும் ஒரு முடிவான கொள்கையில் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் என்று தோன்றுமானால், அவருக்குள்ள இலட்சியம் அவருக்கு – நமக்குள்ள இலட்சியம் நமக்கு என்று உள்ளங்கொண்டு, அவரிடம் அதிகம் வாதாடத் தலைபடமாட்டார். அவர்கள் மாறுபட்ட கொள்கையுடையவாராயினும், ஏதேனும் ஒருவகையில் சமுதாயத்துக்குப் பயன்படுவர்களானால், அவர்கட்கு உரிய மதிப்பினை வழங்கிப் பாராட்டுதல் செய்து, தனிப்பட்ட முறையில் அவர்களுடன் மாறுபாடு இல்லை, கொள்கையிலேதான் மாறுபாடு என்பதை அவர்கள் உணருமாறு செய்திடுவது அவரது இயல்பு. அவர்களையெல்லாம் தம்முடைய பண்பாட்டினாலேயே பெரிதும் கவர்ந்தவர் தந்தைப் பெரியார்.
பெரியார் அவர்கள் எதையும் சாத்திரம் சம்பிரதாயம் என்றோ, முன்னோர் உரைத்தது என்றோ, மக்கள் நம்பிக்கை என்றோ ஏற்பதில்லை. உண்மை, நியாயம், தேவை, மக்களுக்குப் பயன்தருவது என்று உறுதியாகத் தெரிந்தால்தான் ஏற்பார். அதுவே, அவரது தனித் தன்மை வாய்ந்த சிந்தைனையாக வளர்ந்து, உரையாகி, எழுத்தாகி, அவரது குறிக்கோள் ஆகவே வடிவு கொண்டது.
மக்கள் உள்ளத்தில் பதிந்துள்ள பழமையான எண்ணங்களை எல்லாம், பழைய பொன் நகையை உருக்கித் தூய பொன்னாக்கிப் புது அணி செய்ய முற்படுவதுபோன்று, ஆராய்ந்து புதய மதிப்பீடு செய்யலானார்.
மனிதன் – மனித்த் தன்மை பெற, பகுத்தறியும் ஆற்றல் பெற, சமத்துவ சகோதரத்துவ சுதந்திரத் தகுதிபெற, தன்மானம் இழக்காது வாழ, எவை எவை எப்படி எப்படித் தடையாயினும் அவற்றைத் தகர்த்து எறிவதே அவருடைய குறிக்கோள்.
சாதி, குலம், உயர்வு, தாழ்வு, பார்ப்பனியம், புரோகிதம், சடங்குகள், மத நம்பிக்கை, தலைவிதி த்த்துவம், கோயில் வழிபாடு – கடவுள் நம்பிக்கை, மறுபிறவு, மோட்சம் – நரகம் முதலான அனைத்தும் அவரது பகுத்தறிவுக் கேள்விக் கணைகளால் தூளாக்கப்பட்டன.
சமுதாய அடிப்படை மாற்றம்;
பெண்ண்டிமை நிலை மாறவும், கலப்புத் திருமணமும் – விதவை மணமும் ஏற்கப்படவும் அவர் ஆற்றிய தொண்டு பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகோலின.
உழைப்பவர்கள் உருக்குலையவும் வறுமையில் வாடவும், உழைக்கதவர்கள் உண்டு கொழுத்து ஆதிக்கம் செலுத்தவுமான நிலையை எதிர்ப்பதற்கான மனத்துணிவை மக்களிடம் தந்தை பெரியார் உருவாக்கினார்.
பொதுவாகக் கூறின் – இன்றைய சமுதாய அமைப்பே ஒரு நீதி, நியாயமற்ற அடிப்படையில் அமைந்துள்ளதால், அதன் மூலமே , அறிவையும், உழைப்பையும் மதித்து வாழும் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று தெளிந்து அதற்குக் கால்கோள் நடத்தினார் பெரியார்.
எண்ணங்களில் புரட்சியும், செயலில், முயற்சியில் நம்பிக்கையும் ஏற்படச்செய்து, அதன்மூலம் இந்தச் சமுதாய அமைப்பிலேயே ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்கவைத்திடப் பாடுபட்டார் பெரியார்.
ஆம், சமுதாயத்தின் எண்ணமெனும் நீரோட்டத்தை எதிர்த்துத் தமது வல்லமை மிகுந்த அறிவுத் துணை கொண்டு எதிர்நீச்சல் போட்டவர் பெரியார், தமது ஓய்வற்ற உழைப்பாலும், உறங்காத அறிவாலும், தோல்வி அறியாத மனத்தாலும், ஒரு புதிய சமுதாயத்திற்கான சிந்தைன் அடித்தளத்தை அமைப்பதில் வெற்றிக் கண்டவர் பெரியார்.
தந்தை பெரியாரின் எண்ணமும் – கருத்தும், ஏதேனும் ஒருவகையில் மாற்றம் செய்திடாத மனிதனே தமிழகத்தில் இல்லை. இன்று வாழ்பவர் எல்லோருமே – தமது எண்ணப்போக்கில், ஏற்றுள்ள கருத்துகளில் சிறிய அளவிலேனும் அவருக்குக் கடமைப்பட்டவர்களாகவே இருப்பர் என்பதில் ஐயமில்லை.
வாழ்க பெரியார் வளர்த்த சிந்தனை!
வெல்க சுயமரியாதை!