Popular Posts

Wednesday 23 April 2014

கடவுளின் இருப்பு

கடவுளின் படைப்பு
ஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குக் கைப்பிடிச் சுவர் கட்டாமல் தன் குழ்ந்தை – புத்தி இருந்தால் சாக்கிரதையாய் நடக்கட்டும் இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா? அதுபோலவே, ஒரு நல்ல கடவுள், சாத்தானை (தீமைகளை) உண்டாக்கி விட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகள் – புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பிப் பிழைக்கட்டும், இல்லாவிட்டால் சாத்தானால் நரகத்தில் வீழட்டும் என்று சொல்லுவானா?
கடவுள் அறிவுத் தெளிவு இல்லாத இடத்திலிருந்தே தோற்றுவிக்கப்படுகிற ஒரு யூகப் பொருளாகவே – அதாவது முடிந்த முடிவாய் இல்லாமல் நினைத்துக் கொள்கிற பொருஆகவே – கண்டு பிடித்தவனாகிறான். இதனாலேயே எந்த மனிதனும் தனது சாதாரண அறிவுக்கும், காரணம் தெரிய முடியாத விசயங்களுக்கும் மேற்கொண்டு ஆராய்ச்சி அறிவைப் பயன்படுத்த அவசியமில்லாதவனாகிச் சவுகரியமான முடிவுக்கு வர வசதி கிடைத்துவிட்டபடியால் மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி முயற்சிக்கும் அவசியமில்லாமல் போய் மனிதரில் பெரும்பாலானவர்களின் அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி முயற்ச்சியும் தடைப்பட்டு விட்டது.
கடவுட் கோட்பாட்டில் உள்ள அடிப்படைக் கோளாறு
உலகிலே பாழாய்ப் போன எந்தக் கடவுளும்; உலகத்தில் மக்களுக்குக் கேடு செய்த எப்படிப்பட்ட அயோக்கியனையும் மன்னிக்கவும், மன்னிக்க முடியாவிட்டால், கேடு செய்தவனைத் தண்டிக்கவும் தான் தகுதி உடைய கடவுளாக இருக்கின்றனவே தவிர, எவனையும் எந்த ஜந்துவையும் மற்ற மனிதனுக்கு மற்ற ஜந்துவுக்குக் கேடு செய்யாமல் துன்பம் செய்யாமல் இருக்கும்படியான சக்தி இல்லாதவைகளாகத்தானே இருக்கின்றன!
மற்ற நாட்டில் கடவுளைச் சிருட்டித்தவன் கடவுளுக்கு நல்ல குணங்களைச் சிருட்டித்தான். நம நாட்டில் கடவுளைச் சிருட்டித்தவன் மனிதனையே தான் கடவுளாகச் சிருட்டித்தான். அதுவும் நல்ல மனிதனை அல்ல. கெட்ட மனிதனுடைய குணங்களையே கடவுளுக்கு ஏற்றிச் சிருட்டித்தான். மினதன் மாதிரியே சோறு, சாறு வேண்டும். வைப்பாட்டி வேண்டும் என்று இப்படியாகப் பித்தலாட்டமாகத்தான் உண்டு பண்ணினான். மக்களும் இதுவெல்லாம் கடவுள் செயல் என்று தான் எண்ணிக் கும்பிடுகின்றனரே ஒழிய கடவுளுக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும் என்று கருதவே இல்லை.
கடவுளை நம்புவோரின் சிந்தனையற்ற தன்மை
கோயிலில் குழவுக்கல்லில் போய் முட்டிக் கொள்ளுகின்றானே, எவனாவது அது கல் என்று உணருகின்றானா? உண்மையில் அதற்குக் கடவுள் சக்தி இருக்குமானால் ராத்திரியில் திருடன் சாரியைக் குப்புறத்தள்ளி அதன் பெண்டாட்டியின் தாலியையும் சீலையையும் அறுத்துக் கொண்டு போகின்றானே, எந்தச் சாமியாவது ஏண்டா அப்படி என் மனைவியின் தாலியையும் துணியையும் அவிழ்த்துக் கொண்டு போகின்றாய் என்று கேட்கின்றதா? அப்படித் தன் மனைவியின் சேலையையும் தாலியையும் காப்பாற்றாத கடவுள் மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? இதை எவனாவது எண்ணிப் பார்க்கின்றானா?
கடவுட் கோட்பாட்டில் காணப்படும் சிக்கல்
கடவுளை உண்டாக்கினவன் என்ன சொல்லி உண்டாக்கினான்? கடவுள் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு உருவமில்லை. அவன், உன் கண், காது, மூக்கு, செவி, மெய் என்கின்ற அய்ம்புலன்களுக்கும் எட்டாதவன்; ஆனால் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. அவனால் தான் இந்த உலகமே நடக்கிறது என்கிறான். மனம், வாக்கு, காயங்களுக்கு எட்டாதவன், அவன் மனத்திற்கு மட்டும் எப்படி எட்டியது? சர்வவல்லமையுள்ளவனுக்குத் தான் இருப்பதை ஏன் தன்னால் காட்டிக் கொள்ள முடியவில்லை.
கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்வார்; கடவுள் தீமை செய்தவனுக்குத் தீமை செய்வார்’ என்று கடவுள் பிரச்சாரகர்கள் சொல்லுகிறார்கள். அப்படியானால் மனிதனை நன்மை செய்யச் செய்தவன் யார்? தீமை செய்யச்செய்தவன் யார்? ஒரு மனிதனைத் தீமை செய்யாமல் இர்க்கச் செய்ய முடிய வில்லையானால் கடவுள் எப்படி சர்வசக்தி உள்ளவராவார்?
‘கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்து விட்டார்; அந்த அறிவைப் பயன்படுத்துவதில் தீமை ஏற்பட்டால் கடவுள் தண்ட்க்கிறார்’ என்றால் கடவுளுக்குப் புத்தியிருக்க வேண்டாமா? இவனுக்கு அறிவைக் கொடுத்தால் தீமை செய்வான். ஆதலால் இவனுக்கு அறிவும் சுதந்திரமும் கொடுக்கக்கூடாது என்று அறிவுள்ள கடவுள் சிந்திக்க வேண்டாமா?
கடவுளின் இருப்பு
உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? பஞ்சேந்திரியங்களுக்கும், மனதுக்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு மறைந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தி உள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு, அது நமக்கு விளங்கும்படிச் செய்யாவிட்டால் அது எப்படு சர்வ சக்தி உடையதாகும்.
பிரார்த்தனை
கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் இழிவு நீங்காது. நீங்கி விடும் என்று நினைப்பது முட்டாள் தனம். அது இவனுடைய முயற்சியைத்தான் தடை செய்யும்; பிரார்த்தனை செய்வ தென்பதை பெரிய முட்டாள் தனம். பெரிய அக்கிரமத்தைச் செய்து விட்டுப் பிரார்த்தனை செய்து விட்டால் போதுமென்று எவனும் துணிவுடன் அக்கிரமம் செய்ய ஆரம்பித்துவிடுகிறான். பிரார்த்தனையில் உள்ள நம்பிக்கையால் கொலை பாதகனும் கூடத்தான் கடவுளைப் பிரார்த்தித்து விட்டுக் கொலை செய்யச் செல்கிறான். பிரார்த்தனை எங்காவது அவனது கொலை பாதகத்திற்குப் பரிகாரம் ஆகிவிடுமா? பிரார்த்தனையால் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியுமானால், தகுதியும், அறிவும் தேவையே இல்லையே! ஆகவே பிரார்த்தனையின் மூலம் நீங்கள் முட்டாள் ஆவதோடு கடவுளையும் முட்டாளாக்கி விட்டவர்களாகிறீர்கள்.

No comments:

Post a Comment