Popular Posts

Wednesday 23 April 2014

விடிவெள்ளியும் எழுஞாயிறும் தந்தை பெரியாரும் அண்ணாவும்:

விடிவெள்ளியும் எழுஞாயிறும்
தந்தை பெரியாரும் அண்ணாவும்:
பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களும் தமிழ் இனக் காவல்ர் பேரறிஞர் அண்ணா அவர்களும் ‘இருட்டறையில் உள்ளதடா உலகம்’ என்னும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிக்கொத்த நிலையில் மூட நம்பிக்கைகளால் இருண்டு கிடந்த தமிழகத்தில் பகுத்தறிவு ஒளி பரப்பும் விடிவெள்ளியாகவும் அறியாமை இருள் அகற்றும் எழுஞாயிறு ஆகவும் தோன்றித் திகழ்ந்தனர்.

தந்தை பெரியார் பிறந்து முப்பது ஆண்கட்குப் பின்னரே அண்ணா பிறந்தார். பெரியாரின் வைதிக எதிர்ப்புக்கொள்கையில் இளமை முதற்கொண்டே ஆர்வம் கொண்டிருந்த அண்ணா அவர்கள் – பெரியாரின் அறுபதாவது வயதில் அவரிடம் சேர்ந்து பொதுப்பணி ஆற்றத் தலைப்பட்டார்.

‘அறிவில் தொண்டில் முதியார், என்றும்
வாய்மைப் போருக்கே இளையார்”
ஆக விளங்கிய பெரியாரிடம் பெருமதிப்பும் பேரன்பம் கொண்டவரானார்.

பெருமிதமான தோற்றம், அழகான வெண்தாடி, ஊடுருவும் ஒளிபடைத்த கண்கள், அகன்ற நெற்றி, எடுப்பான மூக்கு, கையிலே தடி, இப்படிக்காட்சி தந்த பெரியாரைக் கண்ட அண்ணா அவர்கள் உள்ளம், அவரது தனித் தலைமையை ஏற்றது வியப்பன்று. இளைஞராகவும், உலகைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினராகவும் புத்தறிவு மிகுந்தவராகவும் தோற்றத்தால் எளியராகவும், சராசரி உயரங்கூட இல்லாதவராகவும் இருந்த அண்ணா அவர்களுக்குச் சார்ந்து நிற்க வலிமைமிக்க ஒரு தலைவர் கிடைத்துவிட்டார் என்னும் நம்பிக்கையும் ஏற்பட்டது எனலாம்.

பெரியார் அதற்கு முன்னரே – ஒரு காலம் முப்பது ஆண்டுகள் பொதுப்பணி ஆற்றியவர். அந்தக் காலத்திலேயே நாட்டு விடுதலைக்காக, தீண்டாமை ஒழிப்பாக, மதுவிலக்குக் கொள்கைக்காகத் தியாகங்கள் பலவற்றை ஏற்றியிருந்தவர் பெரியார்.

”எனது வாழ்நாளில் நான் கண்டதும் என் ஒரு தலைவரான தந்தை பெரியார் அவர்களைத்தான்” என்று அண்ணா அவர்கள் எந்நாளும் கூறி வந்ததை நாம் அறிவோம்.

”பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர்களுக்கு ஒரு குறிக்கோளும், பொதுநல நோக்கும் தந்நல மறுப்பும், எளிய வாழ்க்கை முறையும், உழைப்பிலே ஆர்வமும், துன்பங்களையும் தொல்லைகளையும் தாங்கும் மனமும் வேண்டும்” என்னும் அண்ணாவின் கணிப்பிற்குப் பெரியார் அவர்கள் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள்.

இருவர்தம் பழக்கம்:
பட்டிதொட்டி எங்கும் சொற்பொழிவாற்றச் செல்வது இரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணமாதல், வாய்புள்ளபோது குளிப்பது, கிடைத்த உணவை உண்பது, இரவினிலே கண்விழிப்பது, ஓய்வு கொள்ளும் நிலையிலே சற்று உறங்குவது ஆகியவை பெரியாரின் பழக்கம்.

அதேபோன்று, உணவு, உடை, உறக்கம் இவைபற்றிக் கவலைப்படாமல், தனது வசதி எதையும் பொருட்படுத்தாமல் கரும்மே கண்ணாகப் பணியாற்றுவது அண்ணா அவர்கட்கும் இயல்பாகவே அமைந்திருந்தது.

பெரியார் அவர்களிடம், ”நீங்கள் ஏன் தாடி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று சிலர் கேட்டபோது, ”தினம் தினம் சவரம் செய்துகொள்ளுகிற வேலையும் மிச்சம்,நேரமும் மிச்சம், செலவாகும் காசும் மிச்சம்” என்று பதில் அளித்தார்.

அண்ணா அவர்களும் நாளும் வெள்ளையாக உடை உடுத்துவதைக்கூட விரும்பமாட்டார். அவர் முதலமைச்சரான பின்னர், நாளும் வெளுத்த ஆடைகள் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அதற்கே அவர் அலுத்துக் கொண்டதை நண்பர்கள் அறிவர்.

அண்ணா அவர்கள் பட்டதாரியாக விளங்கியபோதிலும், அக்காலத்தில் வாழ்ந்த பிற தலைவர்களைப் போன்று, கோட்டும் – சூட்டும் – பூட்டும் தலைப்பாகையும் அணிவதை அவர் என்றும் விரும்பியதில்லை.

ஏழை, எளிய பாட்டாளி இனத்துக்காகப் பாடுபடும் உணர்வுகொண்ட அத்தலைவர்கட்கு, எளிய வாழ்வுதான் இயல்பாகவே விருப்பமானது. மக்களுடன் இரண்டறக் கலந்து நின்று உழைப்பதில் ஆர்வம் கொண்ட அவர்கள், மக்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டக்கூடிய எதையும் ஏற்கவில்லை.

எழுத்தும் பேச்சும்:
தந்தைப்பெரியார் அவர்கள் தாம் சிந்தித்ததை எழுதுவதிலும், பேசுவதிலுமே அதிக ஆர்வம் கொண்டவர். மற்றவர்கள் நன்றாகப் பேசினும் அதை நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருக்க அவரால் இயலாது. அவர் சொல்ல வேண்டியதைச் சொல்ல நேரம் இல்லாது போய்விடுமோ என்னும் துடிப்பு அவரிடம் ஏற்படும் . அதே போன்று மற்றவர்கள் எழுதியதைப் படிப்பதிலும் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படாது. அதிலும் இலக்கிய நடை, இலக்கியச் சான்று, அடுக்குமொழி என்றால் பொதுவாக ஒரு சலிப்பு அடைவார். அந்த நடையில் நேரடியாக உண்மையை விளக்கவில்லை என்றும், அவர்கள் தாமாக எதையும் சிந்தித்து எழுதவில்லை என்றும், இப்படிப் படித்தவர்கட்கு எழுதுவதால் பயன் என்ன என்றும் கேட்பார்.

பொதுமக்களுக்குப் பயன்படவேண்டுமானால் எதையும் நேராக – வெளிப்படையாக்க் கூறவேண்டும். எளிதாக விளங்குமாறு எழுத வேண்டும் என்பது அவரது எண்ணம்.

அண்ணா அவர்களோ, மற்றவரல்களை நன்றாகப் பேசினால், அவர்களை மேலும் பேச்ச் செய்து கேட்டு மகிழ்ச்சியடைவார். ஒருவேளை மற்றவர்கள் நன்றாகப் பேசாவிட்டாலும் அதை ஒரு நகைச்சுவையாக்கிக்கொண்டு மகிழ்வார். அவரவர் ஆற்றலுக்கேற்ப மக்களிடையே தமது கருத்துகளைப் பரப்புகிறார்கள் என்னும் நோக்கத்தோடு அவர்களை ஊக்கப்படுத்துவார். மற்றவர்களை எழுத்து அற்றலையும் பாராட்டி மகிழ்வார். எடுப்பான தமிழ்நடையும், அடுக்குச்சொல் நடையும், பொருள் பொதிந்த இல்க்கிய நடையும் தமிழ் நடையை வளமுடையதாக்கும் என்று உளங்கொண்டு வரவேற்பார்.

பெரியார் அவர்களை கருத்துகளையே – முதன்மையாக்க் கருதி – வருண்டையோ அழகுநடையையோ, புலமைத் திறனையோ வரவேற்கமாட்டா,. இவையெல்லாம் உண்மையைச் சுற்றிவளைத்துச் சொல்லப் பயன்படுவதாகவே அவர் கருதினார்.

அண்ணா அவர்களோ, சொல்ல வேண்டியதைத் தெளிந்து, சொல்லவேண்டிய முறையையும் தேர்ந்து அழகான இலக்கிய வளமுள்ள, நயமான நடையில் சொல்வதும் – எழுதுவதுமே மக்களை ஈர்க்கும் ஆற்றல்மிக்கது எனக்க கண்டார்.

பெரியார் அவர்கள் ‘சிந்தனையின் வெளிப்பாடு’ ஆக இருந்தார். அண்ணா அவர்கள் சிந்தனைக்கு இலக்கிய வடிவம் தந்தார். பெரியார் அவர்கள் தமது எண்ணம் கருத்து, கொள்கை என்பதிலேதான் பெரிதும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அண்ணா அவர்கள், இது அறிஞர்கள் கண்ட முடிவு. வள்ளுவர் கருத்து, புலவர்களை பாடியது. இலிங்கன் சொற்பொழிவு என்று எடுத்துக்காட்டித் தமது கொள்கைக்கு ஆதரவு தேடுவதிலேதான் ஆர்வங்காட்டினார்.

பிறர் எண்ணங்கள் – கருத்துகள் பொருள் உடையவை அல்ல- பயன் தரவில்லை என்பதை எடுத்துக்காட்டி, ஒரு புதிய சிந்தனையை, சிந்திக்கும் ஆற்றலை உருவாக்கவேண்டும் என்பதிலே பெரியாருக்கு நாட்டம்.

அந்தப் புதிய சிந்தனையால் ஏற்கவேண்டிய முடிவை மக்களை எளிதாக ஏற்கச் செய்வதற்கு, உரிய வழியாகச் சான்றோர் பலர் கூறிய கருத்துகளை எடுத்துக காட்டுவதிலே அண்ணாவிற்கு நாட்டம்.

”பெரியார் ஒரு சிந்தனைச் சிற்பி
அண்ணா ஒரு பல்கலைச் செல்வர்”

பெரியார் அவர்கள் தமக்குத் தோன்றும் துறைகளிலே எல்லாம் சிந்தனையைச் செலுத்தி, அதை அப்படியே மக்களிடம் கூறியவர். அண்ணா அவர்கள் மக்கள் சீர்திருந்துவதற்கு வேண்டிய வழியிலேயே சிந்தித்து – மக்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே கூற முற்பட்டார்.

பெரியார் தமது கருத்தை எவ்வளவுபேர் ஏற்பர் என்றோ, ஏற்றுக்கொள்ளும் திறமை, ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறதா என்றோ கவலைப்படமாட்டார். தமது கருத்துகள் பலருக்கும் உடன்பாடு இல்லாத நிலையில் அதைப் பரப்ப முற்பட்ட பெரியார் அவர்கள் யார் ஏற்றாலும் – ஏற்காவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படக்கூடாது என்பது அவர் முடிவு செய்து கொண்டிருந்த ஒன்று தமது பணி உடனே வெற்றி பெறும் என்றோ, எல்லோரும் ஏற்கும் விரைந்து வரும் என்றோ பெரியார் கருதவில்லை. அதற்காக்க் கலங்கவும் இல்லை.

அண்ணா அவர்களோ – பெரியாரின் கொள்கையை எந்த அளவு பலரும் ஏற்கின்றார்களோ அதைப் பொருத்துதான் பயனும், வெற்றியும் இருக்கிறது என்று தெளிவாக உணர்ந்ததால், பலரையும் ஏற்கச் செய்யும் வகையறிய்தநு தமது கருத்தை எடுத்து வைப்பர்.

மக்களின் சிந்திக்கும் திறன்றற நிலையைக் கருதிய பெரியார் அவர்கள், மக்கள் மடையர்களாக இருப்பதால்தான் முட்டாள்களை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் என்று குறிப்பிடுவதுண்டு.மக்களை அவரவர் அறிந்தவற்றைக்கொண்டு மேலும் சிந்திக்க வைக்க முடியும் என்னும் நம்பிக்கையோடு அண்ணா அவர்கள், மக்கள் தமது அறிவாற்றலிலே நம்பிக்கை கொள்ளுமாறு பேசுவார்.

பெரியார் அவர்கட்குத் தாம் பேசுவதிலே தமக்கே ஒரு மனநிறைவு, மகிழ்ச்சி, அதனால் கேட்பவர் மகிழ்கிறார்களா என்று கவலைப்பட்டார்.

”நான் சிந்திப்பதற்காகவே நான் பேசுகிறேன், கேட்கின்றவர்களும் சிந்தித்துப் பாருங்கள், சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் உங்கள் வழி உங்களுக்கு, என் வழி எனக்கு – என் கருத்தை ஏற்க வேண்டுமென்று கட்டாயமில்லை.” என்பது பெரியார் பேச்சு.

”நான் எழுதுவதை நானே அச்சுக்கோத்து, நானே அச்சிட்டு, நான் மட்டுமே படித்துப் பார்த்துக்கொள்ளும் நிலை வந்தாலும் – ‘குடியரசு’ ஏட்டினை நான் தொடர்ந்து அச்சிட்டுக் கொண்டுதான் இருப்பேன்” என்று பெரியார் கூறியதை எண்ணிப்பார்த்தால், அவரது உறுதி மட்டுமேயன்றி அவருக்குத் தமது கொள்கையிலே ஏற்பட்டிருந்த ஈடுபாடும் மனநிறைவும் நன்கு விளங்கும்.

அண்ணா அவர்களோ மற்றவர்கள் மகிழ்வதிலே, ஆர்வங்காட்டுவதிலேதான் தமது பேச்சுக்குப் பயன் இருப்பதாகக் கருதுவார். மற்றவர்கள் பக்குவப்படத்தான் நாம் பேசுகிறோம், மற்றவர்கள் உடன்படச் செய்யத்தான் நாம் எழுதுகிறோம் என்னும் நோக்கத்தோடுதான் அண்ணா செயல்பட்டார்.

பெரியார் ஒவ்வொரு கருத்திலும் வேற்றுமையைக் கண்டு கொள்ள முனைவார். அண்ணா ஒவ்வொரு கருத்திலும் ஒற்றுமையைக் காட்ட முனைவார். அனைத்தையும் பகுத்தறிவே பெரியாரின் குறிக்கோள். தேவையானதைப் பகுத்தறிந்து, எடுத்துக்கொள்ளக்கூடியதை ஏற்பதே அண்ணாவின் குறிக்கோள்.

சிந்திக்கும் வகையால், பெரியார் ஒரு சூறாவளி, புயல், காட்டாறு, எரிமலை.

சிந்தனையைப் பயன்படுத்தும் முறையால் அண்ணா ஒரு தென்றல், பருவமழை, திருக்குற்றால அருவி, பூங்கா, பசுமலை.

பெரியார் எண்ணங்களை வெளியிடுவதில் பூந்தோட்டத்தில் பாத்திகளில் அமைக்கப்பட்ட வகைவகையான பூச்செடிளும் கொடிகளும் பூத்திருக்கும் காட்சியைத் தருபவர்.

பணி:
நிலத்தின் அடியில் ஆழத்தில் மறைந்து கிடக்கும் பொற்கனியை – சுரங்கத்தில் இறங்கிச் சென்று வெட்டிக் கொண்டுவருதை ஒத்த பணி பெரியாருக்கு அமைந்தது.

அந்தப் பொற்கனியிலிருந்து பொன் தகளைப் பிரித்து எடுத்து, உருக்கி வார்த்துப் பொன் அணியாக்குவதை ஒத்த பணி அண்ணாவுக்கு அமைந்தது.

பெரியார் ஊட்டிய தன்மான உணர்ச்சியை, இன எழுச்சியாக உருவாக்கிய அண்ணாவின் திறம் அப்படிப்பட்டதான்.

பெரியார் அவர்கள் எதிர்ப்பிலேயே ஈடுபட்டு எதிர்ப்பிலேயே வளர்ந்ததால், எதிர்நீச்சல் எண்ணமே அவருக்கு இயல்பாயிற்று.

பழமையையும் வைதிகத்தையும் மூடநம்பிக்கைகளையும் உடைத்தெரிவதிலேயே அவருடைய நேரமும் நினைப்பும் செலவிடப்பட்டது.

அண்ணா அவர்கள், ஜனநாயக நெறியிலே நம்பிக்கை மிக்கவராக இருந்ததால் – பெரும்பாலோர் எண்ணத்தையும் நம்பிக்கையையும் உடைத்தெறியும் மறையை மேற்கொள்ளாது, தமது எண்ணத்தை ஏற்க வைப்பதிலும் – மக்களுடைய நம்பிக்கையைத் திருப்பி விடுவதிலும் தமது முயற்சியைச் செலவிட்டார். வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவது எதிர்நீச்சல் மட்டுமே போட்டுக்கொண்டிருப்பதற்காக அல்ல – எதிர்க் கரையில் சேரவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதற்காக என்னும் நோக்கத்தோடு செயல்பட்டார்.

மனிதனின் எண்ணங்கள் பலவற்றையும் வேருடன் புரட்டி மாற்றுவதிலே தமது இலட்சியத்தைக் கண்டவர் பெரியார்.

மனிதனின் சமுதாய வாழ்வுக்கு தேவையான, காலத்திற்கு ஏற்ற, கருத்து மாற்றத்திற்குத் தயாராவதற்கு வழிகாட்டுவதையே தமது குறிக்கோளாக அமைத்துக் கொண்டவர் அண்ணா!

ஆம்! பெரியார் – பகுத்தறிவைப் பரப்புவதே நோக்கமாக்க் கொண்டவர்

அண்ணா – சமுதாயச் சீர்திருத்தத்துக்காகப் பகுத்தறிவைப் பயன்படுத்தியவர்.

பெரியார் – மதவழி நம்பிக்கைகளின் எதிரி.

அண்ணா – சமுதாய மறுமலர்ச்சியின் துணைவன்.

பெரியார் – பழமை அனைத்தையும் மாற்ற நினைத்தவர்.

அண்ணா – பழமையில் பயனுள்ளவற்றை ஏற்றுப் புதுமையை வளர்க்க முனைந்தவர்.

பெரியார்- மூடநம்பிக்கைகளை எரிக்கும் நெருப்பு.

அண்ணா – அறிவப் பயனை விளக்கிய சுடரொளி.

பெரியார் – தமிழர் வாழ்வின் திருப்புமுனை.

அண்ணா – தமிழர் வாழ்வின் மறுமலர்ச்சி.

பெரியார் – உரிமையை உணர்த்தியவர்! தன்மானம் காத்தவர்!

அண்ணா – உரிமையைக் காக்கும் வழி கண்டவர், இனமானம வளர்த்தவர்!

பெரியார் – வானுயர் அறிவு மலை!

அண்ணா – அம்மலைமுடி தழுவிய கொண்டல்!

பெரியார் – காட்டாற்று வெள்ளம்!

அண்ணா – அதைத் தேக்கிப் பயன்படுத்தும் பேரணை!

பெரியார் – நம்மை விழித்து எழச் செய்தவர்!

அண்ணா – நம்மை வழி நடத்தியவர்!

பெரியார் – கலங்கரை விளக்கம்!

அண்ணா – துறைமுகம்!

தமிழகமே கப்பல்; நாம் அதன் பயணிகள்!

ஆம்! பெரியாரால்தான் அண்ணா! பெரியார் தொண்டால்தான் அண்ணவின் பணி வடிவு கொண்டது; விடிவெள்ளிக்குப் பின்னர்தானே எழுஞாயிறும் தோன்றி வலம் வருகிறது.!

No comments:

Post a Comment