Popular Posts

Wednesday 23 April 2014

ஒரு ‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகள்!


ஒரு ‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகள்!



கேள்வி: 1




அனைத்திற்கும் ‘மூலம்’ ஆக இருப்பவர் ‘ஒரு கடவுள்’ என்கிறார்கள் [அதென்னங்க, ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு!]. இது ஆன்மிகங்களின் ‘அனுமானம்’ மட்டுமே.


மையப்புள்ளி இல்லாத, நீளம் அகலம் சுற்றளவு விளிம்பு என்று எந்தவொரு அளவுகோலுக்கும் உட்படாத அதிசயிக்கத்தக்க அதிபிரமாண்டமான ‘வெளி’ [அண்டங்கள், பேரண்டங்கள், பிரபஞ்சங்கள், வஞ்சகங்கள், சூதுவாதுகள் முதலான எல்லாம் இதுக்குள்ள அடக்கம்னு சொல்றாங்க!]யில் இடம்கொண்டிருக்கும் ‘அத்தனைக்கும்’ மூலமாக இருப்பது ஒரே ஒரு கடவுள் என்பது சற்றும் தெளிவற்ற கருத்தாகும்.


பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியால்..... யுகயுகங்களாக நடந்த பெரும் போரால் ஏனையோர் அழிந்துவிட இவர் ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?!





கேள்வி: 2




‘வெளியில் உலா வரும் கோள்களும், நட்சத்திரங்களும் பிறவும் வடிவமைக்கப்பட்ட விதமும், உயிர்களின் விசித்திர உருவ அமைப்பும், ஒழுங்குக்கு உட்பட்ட இயற்கைப் பொருள்களின் இயக்கமும் அதிசயிக்கத்தக்கது. இந்த அதிசயம் தானாக நிகழ்ந்திருக்க முடியாது. இதை நிகழ்த்த ஒருவர் தேவை. அவரே கடவுள்.’ இது, கடவுளை நம்புவோர் முன்வைக்கும் மிக முக்கிய வாதம்.




‘கடவுள் ஆதியும் அந்தமும் இல்லாதவன்; அவன் எப்போதும் இருப்பவன்’ என்றால், அதுவும் ஓர் அதிசயம்தான். “அந்த அதிசயத்திற்குப் பின்னாலும் ஏதோ ஒன்று இருந்துதானே தீரும். அது எது?” என்று கேட்கப்படும் கேள்வியை அவர்கள் எப்போதுமே கண்டுகொள்வதில்லையே, அது ஏன்?





கேள்வி: 3




‘கடவுள் இருக்கிறார்’ என்பது அனுமானம். எல்லாம் அவரே என்பதும் அனுமானம்தான். இதற்கு மாறாக..........


‘படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளுக்குக் காரணமான அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக் கூட்டங்கள் வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம். அவை மிகவும் மேம்பட்ட அறிவு படைத்தவை [அறிவியல் பூர்வமாக ஒரு நாள் நிரூபிக்கப்படலாம்]; எப்போதும் இருப்பவை; இவை ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத் தத்தம் கடமையைச் செய்கின்றன. இது இயற்கை’ என்றுகூட நாம் அனுமானம் செய்யலாம்.




இப்படி அனுமானிப்பது எவ்வகையிலும் தவறல்லதானே?





கேள்வி: 4




படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்பார்கள். படைப்புத் தொழிலை அவர் எப்போது தொடங்கினார் என்பது அவதாரங்களுக்கும் மகான்களுக்கும் தெரிந்திருக்கக்கூடும்! சொல்வார்களா?





கேள்வி: 5




தனிப் பெரும் சக்தியாக விளங்குபவர் கடவுள். இவர் படைத்தவற்றை வேறு எதுவும் எவரும் அழிக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது. அப்புறம் எதற்குக் காத்தல் தொழில்?





கேள்வி:6




‘அதர்மம் தலைவிரித்தாடும் போது அதை அழிக்கவும் செய்வார் கடவுள்.’ என்பார்கள். அன்பே உருவான, அறிவுக் கடலான சாந்த சொரூபியான இந்தக் கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எவ்வாறு? அது உருவானது எப்படி? அது உருவாகும் போது கடவுள உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாரா?





கேள்வி: 7




விழிப்புப் பெற்ற கடவுள், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே! ஒட்டு மொத்த உலகையும் ஏன் அழிக்க வேண்டும்?





கேள்வி: 8




கடவுள், படைப்பதும் அழிப்பதுமான தொழிலைத் தொடர்ந்து செய்கிறார். காரணம், அவரால் ஒருமுறை அழிக்கப்பட்ட அதர்மம் மீண்டும் உயிர் பெற்று எங்கோ பதுங்குவது தொடர் நிகழ்வாக இருத்தல் வேண்டும்! கடவுளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அதர்மம் பதுங்கும் இடம் எதுவாக இருக்கும்? கடவுளின் காலடியா?


இன்னும் கேட்பதற்குரிய கேள்விகள் ஏராளமாய் உள்ளன. என்னுடைய ‘கூமுட்டை’த் தனத்தை வெளிப்படுத்த இவை போதும் என்பதால் இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment