மனிதனின் பிறப்புரிமை
மனிதச் சீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுய மரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியுருக்கின்றது. ஏனெனில், மனிதன் மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்.
மானத்தைப் பற்றிக் கவலை இல்லாதவன் எவ்வளவு படித்தவனானாலும் அவன் தாசிக்குச் சமமானவனே ஆவான்; அவனது படிப்பும் மானாபிமான முள்ளவர்களுக்கு ஆபத்தாகவே முடியும்.
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்.
அரசியல் இயக்கம் முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் – பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்ற சொல்லுகின்றது. ஆனால் சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள்; அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.
பக்தி, அடிமைத்தன்மை
பக்தி என்பதே அடிமையைவிட மோசமான வார்த்தை என்று எண்ணுகிறேன். அடிமை என்பது சரீரத்தால் மாத்திரம் தொண்டு செய்யக் கடமைப்பட்டவனாவான். பக்தி என்பது சரீரத்தினால் தொண்டு செய்ய வேண்டியதுடன் மனத்தினாலும் செய்ய வேண்டும். ஆகவே மனத்தைச் சுவாதீன மற்றதாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, சுதந்திரத்தையும், சுய மரியாதையையும் எதிர்பார்க்கும் மனிதன் யாருக்கும் பக்தனாயிருக்க முடியாது. யாரையும் பக்தியாயிருக்கச் சொல்லவும் முடியாது.
ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.
சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம்.
சுயமராயாதை இயக்கம்
சுய மரியாதை இயக்கமானது – வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான்.
கடவுள் ஒழிப்பு
சுய மரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது. ஆனால், நமது நாட்டில் அந்தச் செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரர்கள் செய்கின்றார்கள்.