Popular Posts

Wednesday 23 April 2014

உயிர் அச்சம்;

உயிர் அச்சம்;
நமது நாட்டு மக்கள் எவ்வளவு தொன்மையான நாகரிகமும் வாழ்க்கை முறையும் கொண்டவர்களோ – அந்த அளவு பழமையில் ஊறிய மன்தினராக்வும் புதுமையைக் காணவும் உணரவும் திறனற்றவர்களாகவுமே உள்ளனர். முன்னோர் வாழ்ந்த முறை எதுவெனினும் – அதுபற்றிச சிந்திக்கவோ, ஆராயவோ, சக்தியற்ற ஒரு நிலையில் – பல்வேறு நம்பிக்கைகளுக்கிடையிலே நசுங்கிக் கிடந்தனர்; கிடக்கின்றனர்.
எதை நம்புவதற்குப் பழகிவிட்டார்களோ அது உண்மை. எது பெற்றோர்களும், பெரியோர்களும் கைக்கொண்டிருந்த முறையோ, அது தவிரப் பிறவற்றைப் பிறர் கூறினாலும் அதைக் கேட்குமளவு பொறுமைகூடக் காட்ட முடியாத நிலையினர்.
சிந்தனையைத் தோற்றுவிக்கும் சங்க இலக்கியங்களும், வாழ்வின் வழியை விளக்கித் தெளிவடையத் துணையாகும் திருக்குறளும் – மேலும் பலப்பல இலக்கியக் கருவூலங்களும் உள்ளன். எனினும் , அவை பொது மக்களில் பெரும்பாலோர்க்கு எட்டாத செல்வங்களாகவும் – எட்டிய சிலருக்கும், அவர்தம் உளப்பான்மை காரணமாக அதன் கருத்துகள் கொள்கைகள் நடைமுறைக்கு ஏறகாதவையாகவுமே இருந்தன. மிகச் சிலரே – அவற்றைக் கற்றுத் தெளிந்து, சிந்தித்து ஆராய்ந்து சமுதாய நல்வாழ்விற்கும் காலத்துக்கும் ஏற்படைய கருத்துகளை உணர்ந்தவராயினர். அவர்களுங்கூடக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளையும், மக்கள் முன்னேற்றத்தையும் நல்லுறவையும் கெடுக்கும் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் மறுக்கவோ, கண்டிக்கவோ முன்வருவது அரிதாகே அமைந்தது.
பழமைப் பற்றுடன் கூடிய சமூகத்தில், வேரூன்றிய சாதி எண்ணமும், மக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த சமய மூடநம்பிக்கைகளும், வாழ்வைப் பற்றிய கவலையும், உயிரைப்பற்றிய அச்சமும் அன்றாட வாழ்வை ஓட்டினாலே போதும் என்ற நினைப்பும் நாட்டு மக்களை இறவாமலே இறந்தவர்களாக ஆக்கி வைத்திருந்தது. எதற்கும் – எல்லாவற்றுக்கும் அஞ்சி அஞ்சி சாவாராக இருந்தனர். பகல் ஒளியைக் காணவும் கூசும் அறிவுக் கண்ணினராக, இருட்டறையில் உள்ளதடா உலகம்!” என்று புரட்சிக் கவிஞர் கூறும் நிலையில் மங்கியும், மயங்கியும், மயக்கறுப்பார் யாரும் துணிந்து வராத நிலையில்,விழிப்பற்றுக் கிடந்தனர்; இன்றும் கிடப்பவர் பலர்.
இருளில் எழுந்த ஒளி;
அந்நிலையிலேதான், தாமாகவே எதைப்பற்றியும் துருவிப் பார்க்கும் அறிவும், தமது அறிவுக்குச் சரி என்று தோன்றாத எதையும் ஒப்புகொள்ளாத மனமும், தமக்ககுச் சரியென்று பட்ட எதையும் பிறர் என்ன நினைப்பார்கள் என்ற கவலைக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளாத நெஞ்சமும் பெற்ற ஒருவர் – தாம் எண்ணுவதை வெளியிட- மக்களிடம் எடுத்துச் சொல்ல முன்வந்தார். தம்மை மதிப்பார்களா? போற்றுவார்களா? எதிர்ப்பார்களா? ஏளனம் செய்வார்களா? என்று அவர் கவலைப்படவில்லை.
ஊதவேண்டிய சங்கை ஊதினால், விடிகிறபோது விடியட்டும் , இல்லாவிடினும் மக்களுக்கு விழிப்பேனும் ஏற்பட்ட்டுமே என்று தொடங்கினார் தமது பணியை! வாழ்க்கை என்பது – பிறர் பாராட்டுவதற்காகே நடத்தப்பட வேண்டியதன்று! ஒட்டுக்கும் உறவுக்கும் அஞ்சி ஒடுங்கிய கருத்தோடு முடங்குவதைவிட, உண்மை எதுவென்று காட்டிட, உள்ளத்தில் பட்டதை ஊரறியப் பேசியே தமது கேள்விக்கு விடைகாணச் செய்வோம் என்று முனைந்தார் அவர்.
சாதிப் பித்தத்தில்ஆழ்ந்த மக்களையும், சமய பக்தியில் மூழ்கிக் கண்மூடிக் கிடந்த சமுதாயத்தையும், மூட நம்பிக்கை ஆட்கொண்டிருந்த நிலையில், அவர்தம் நிலையிலிருந்து கண் திறக்கச் செய்யும் என்று அறிந்திருந்தும்கூட, ஆவது ஆகட்டும்! என்று பலன் எதிர்பாராத துணிச்சலுடன் கருத்து எதிர்நீச்சலில் அவர் ஈடுபட்டார்.
‘அயர்ந்து தூங்குகிறவர்களை எழுப்புவதே கடினம்! அதிலும் அறவு செயற்படாத நிலையில், மத மூட நம்பிக்கைகளால் மூடப்பட்டுத் தம்மறிவை இழந்து மீளாத தூக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களை – சமுதாயத்தை எழுப்புவது எளிதாமோ? ஆயினும், அந்தப் பெரும் பணியை – தொல்லை மிகுந்த கடைமையை – அவர் மேற்கொண்டார். ‘என் கடன் பகுத்தறிவுப் பணி செய்து கிடப்பதே’ என்ற முடிவுடன், ஓர் இயக்கத்தையே உருவாக்கினார்.
பல புதுமைக் கருத்துகளையும் – பகுத்தறிவு வாத்த்தையும் தாம் நினைத்த வண்ணமாகவே மிகவும் எளிய முறையில் எவருக்கும் விளங்குமாறு – பேசவும் எழுதவும் முனைந்தார்.
கொள்கை உறுதி;
தமது கருத்தை ஏற்போரும் ஆதரிப்போரும் மிகச் சிலரே எனினும் – அவர் தம் கொள்கை உறுதியே தமது வெற்றிக்கு அறிகுறி என்று கொண்டார். தமது எழுத்தை எவரும் படிக்கவில்லை என்றாலும், தாமே அச்சடித்து, தாமே படித்து, தம் கடமையைச் செய்த்தை எண்ணி மகிழ்ச்சியடைவேன்’ என்ற ஓர் உறுதியை உலகுக்கு அறிவித்து செயலாற்றினார். ‘கொள்கை உடையான் எதிர்ப்புக்கு அஞ்சான்’ என்னும் மொழிக்கு இலக்கானார்.
தமது கருத்தும் கொள்கையும் அடிப்படையான சமுதாய சீர்திருத்தத்துக்கு வழிகோலும் என்னும் நம்பிக்கையுடன் நாடெங்கும் பட்டி தொட்டியெல்லாம் அதைப் பரப்புவதே தமது தொழில் என்றார். கல்லடியும், சொல்லடியும், கலவரமும், கடும் தாக்குதலும் நிகழ்ந்தபோதும் – சோர்வடையாமலும், இலட்சியத்தைக் கைவிடாமலும் ‘மக்களுக்காகத்தான் நாம் வாழ்கிறோம்’ ‘இழிவுக்கும் பழிக்கும் ஆளான தாழ்ந்த நிலை பெற்ற மக்களுக்கு வாழ்வளிப்பதை விட நமக்கேன் வேறு வாழ்வு’ என்ற எண்ணத்துடன் – ‘தியாகத்திரு நாள்களாக’த் தமது வாழ்கைக் பாதையை அமைத்துக் கொண்டார்.
அதிர்ச்சி வைத்தியம் செய்யாதவர்;
இன்றுள்ள சூழ்நிலையில் அதன் அருமையும் பெருமையும் உணராதோர், இன்றைக்கு 65 ஆண்டுகட்கு முன்னர் (1925) அந்தப் பயணம் தொடங்கப்பட்டபோதிருந்த நாட்டின் நிலைமையை எண்ணிப் பார்த்தால், விளங்காமல் போகாது.
சுதந்திர வேட்கை வளராத காலம். நாட்டு விடுதலை என்பது எதுவென அறியா மக்கள்,
படிப்பறிவு இடம்பெறாத சமூகம்!
தாய்மொழிப்பற்று அறியாத நிலை!
எந்த ஆதிக்கத்தையும் எதிர்க்கத் தெரியா மக்கள!
கையும் காலும் தளைகள் பூட்டப்பட்டு – கண்கள் கட்டி வைக்கப்பட்டு, காதுகள் அடைக்கப்பட்டு, வாயில்லாப் பூச்சிகளாக – இருட்டறையில் தள்ளப்பட்டுக் கிடந்த மக்களிடையே பகுத்தறிவுச் சுடரைக் கையிலேந்தி – சுயமரியாதை உணர்வு என்னும் தளையறுக்கும் வாளேந்தி – தன்மான இயக்கத்தோழர்கள் என்னும் வீர உணர்வு கொண்ட இளைஞர்களுடன் சென்று, அவர்களையெல்லாம் விடுவிக்க முற்பட்டார்கள் என்றால், அது வியப்பன்றோ! அவர் தோற்றுவித்த அந்த அறிவுப்படைஎதனை வைதிகப் பித்தர்களை, சமயச் சழக்கர்களை எதிர்த்துப் போரிட்டு, எப்படியோ தம்மைக் காத்துக்கொண்டு, தம் கடமையைச் செய்த்து என்பதை அறிந்தவருக்கு இன்றும் வியப்பே ஏற்படும்.
‘சாதி என்பது ஏதடா? பிறப்பால் உயர்ந்தவன் எவனடா? தாழ்வுதான் பிறிவியிலேயே நமக்கு வருமோடா’ என்று கேட்க முற்பட்டு, ‘சமய வாதங்கள் ஒரு சிறு கூட்டத்தின் சுய நலமல்லவோ! அதை மறைக்கவே வெளி வேடம்’ என்று முழங்கி, ‘கடவுள் நம்பிக்கையின் பேரால் கண்மூடிக் கிடப்பதேனோ! சிறிதும் பசித்திராத ஆண்டவனுக்கு ஆறுகால பூசைதான் ஏனோ? என்றெல்லாம் மக்கள் செவிப்பறை கிழியச் சங்கநாதம் செய்து விழித்தெழ வைத்தவர் அவர். ஆம்; அவர் நடத்தியது ‘அதிர்ச்சி வைத்தியம்’ தான்! அது தவிர வேறு வழியில்லை. வேறு கதியில்லை. இப்படி – மக்களை விழிப்படையச் செய்த வித்தகரே, தமிழகத்தின் தனிப்பெருந் தலைவர், திராவிடத் தந்தை, பகுத்தறிவுச் செம்மல் பெரியார் அவர்கள்! அவரது பாசறையில் படித்தவன் என்பதில் பெருமையடைபவன் நான்! என் போன்றார் ஏராளம் இந்நாட்டில்!
அவர் நமக்குத் தந்த பெருவாழ்வை, புதுவாழ்வை, புதிய சமுதாயத்தை யார்தான் மறக்க முடியும்! தம்மை ‘மனிதர்’ ஆக்கியவரை – ‘மனிதராக உணர்ந்த யார்தான் மறப்பர்! அவர் வாழ்ந்தால் நாம் வாழ்கிறோம்! என்னும் நினைவுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என, உறுதிகொள்வீர் இளைஞர்களே!
பகுத்தறிவுத் திறன் இழந்ததேன்;
உலகத்தில் வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுள்ள மேல்நாட்டு மக்களும், சீன, சப்பானியரும் நாகரிகத்தின் முகப்பில் அடி எடுத்து வைக்கும் முன்னரே, நாகரிக வாழ்வு கண்டு, நானில வகை கண்டு, ஒரு தனித் தன்மையுடன் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள்- தென்னாட்டுத் திராவிட மக்கள்- கடந்த சில நூற்றாண்டுகளாவே வாழ்விழந்து, வளமிழந்து, உரிமை மறந்து, தலைதாழ்ந்து கிடக்கின்றனர்.
பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு மொழி கண்டு, எட்டயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூடிவாழும் வாழ்கைக்கு முறை கண்டு, ஐயாயிர்ம் ஆண்டுகட்கு முன்னரே கோனாட்சிக்கு வழிகண்டு, இயற்கையில் முத்தமிழாய் முகிழ்த்த தமிழின் திறன்கண்டு, சிந்தனையைச் செய்யுள் வடிவத்தில் கண்டு, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியங்கட்கு இலக்கணங்கண்டு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகம் வியக்கும் ‘திருக்குறள்’ என்னும் பொது அறம் விளக்கும் நூல் வடிவு பெறக்கண்டு, பண்பாட்டின் உயர் கோபரத்தின் உச்சியில் ஏறி நின்று உலகு கண்டு, தென்னகத்தின் கிழக்கிலும், மேற்கிலும், அலைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகளின் துறைமுகங்களிங் இணயின்றி வாழ்ந்த இனந்தான், படிப்படியாகச் சரிந்து, பகுத்தறிவைப் பயன்படுத்தும் திறன் இழந்து அல்ல்லுற்று நிற்கின்றது இடைக்காலம் முதலாக.
வைதிக சூழ்ச்சி;
உலகியல் தெளிந்து, உழைப்பினில் வாரா உறுதிகள் இல்லை என்னும் முடிவுடன், உழவினைப் போற்றி, வேளாண்மை வழிபட்ட நாகரிகம் வளர்த்து, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் பொது நோக்குடன் ‘ சமய நெறி- மதவழிகள்- பற்றிய எண்ணங்களில் பிணைப்புண்டு தம்மை இழந்துவிடாது, முயற்சியுடையராய், நாடு காக்கும் ஆற்றல் மறவாரய் வாழ்ந்த மக்கள்தாம் பின்னர் வைதிக மறையவர், மன்னர் அவையைத் தமது களமாக்க் கொண்டு, செல்வாக்கு ஆட்பட்டு, மெல்ல மெல்ல வைதிகத்தின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டவராயினர். வைதிகம் செல்வாக்குப் பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் பரப்பப்பட்ட சமண புத்த மதங்களின் கோட்பாடுகள் கற்றவர்களின் சிந்தனைக்கு ஒரு வகையில் விருந்தாகி, மற்றவர்களால் ஓரளவே பின்பற்றப்பட்டன. சில கொள்கைகள் பொதுவில் பரவலாக இடம்பெற்றன எனினும், மக்கள் குடும்பம் குடும்பமாக ஒரு மதச் சார்வுடையவராகும் நிலை அன்று இல்லை; ‘மதம்’ இன்றேல் மனித வாழ்வு இல்லை’ என்னும் நிலை அந்நாளில் இல்லை.
மேலம் சமணமும், பவுத்தமும் வைதிகரின் வேதங்களையும் அவற்றில் பேசப்படும் தெய்வங்களையும் யாகங்களையும் மறுப்பவை. சமய வழிகாட்டிகளையே தெய்வமாகப் போற்றுவதன்றித் தனியாக ‘ஒரு கடவுள்’ உண்டென்று ஏற்றுப் போற்ற உடன்படாதவை. ஆயினும், அந்த மதங்கள் மூலம் – பாவம், புண்ணியம் , நிலையாமை, பிறவிகள், முற்பிறப்பு, மறுபிறப்பு, கருமம், தலைவிதி முதலான கருத்துகள் மக்களிடையே பரவலாக இடம்பெறலாயின. எனினும், மதம் – அதற்கெனப் புறப்பட்ட துறவிகளுடைய கவலையாக இருந்ததன்றி, மக்களின் அன்றாட வாழ்வைக் குலைக்கவில்லை எனலாம்.
அக்காலத்தில் மக்கள் ஒரு குறிப்பிட்ட சமயம் – மதம் என்று போற்றிப் பின்பற்றும் நிலை இல்லையாயினும், பல காலமாக நிலவி வந்த மரபுடன் ஒட்டிய பலப்பல தெய்வங்களை வழிபட்டதுடன், பலி முதலான பல சடங்குகளையும் செய்து வந்தனர். குலதெய்வம் – குடும்ப தெய்வம் – ஊர்க்காவல் தெய்வம் – முதலான பலவும் நடுகல் வழிபாட்டிலிருந்து கிளைத்துப் பெயர் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட மக்களைத்தான் வைதிகம் வளைத்தது. வேத வழியினரான ஆரியர்களை மும்மூர்த்தி முதலாக இந்திரன், எமன், வருணன், அக்கினி முதலான பல தெய்வ வழிபாட்டினராயினும், ‘கடவுள்’ என்னும் பொதுப்பெயரைக் குறிக்கக்கூட அறியாதவராயினும், தமது தெய்வங்கள் எல்லாம் ஆற்றல் மிக்கவை என்றும், அவர்களுள்ளும் மும்மூர்த்திகளே மூலவர் என்றும் பரப்பத் தொடங்கிய காலத்தில், அதை மறுக்குமளவு மக்களுக்குத் தெளிவு பிறக்கவில்லை. ”எங்கள் சாமி – பெரிய சாமி, எல்லா சாமிக்கும் எசமான் சாமி” என்னும் எண்ணத்தைப் பரப்பியே செல்வாக்குப் பெற்றனர்.
நெடுங்காலமாகச் சிவனை (லிங்கத்தை) வழிபட்டு வந்த மரபினர்- சிவன் ஒன்றே தெய்வம் – என்னும் கொள்கை வழிபட்டவராயினும், வேத வைதிக ருத்திரனும்- சிவனும் ஒன்றென எண்ணுமாறு கற்பனைக் கதைகள் வளர்ந்ததால், சிவத்தின் தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறி விட்டனர்.
தனித்தன்மைகள் மறைந்தன;
பல காலமாக்க் கண்ணனை வழிபட்டு வந்தோர், அவனே திருமால் என்றும் – கண்ணனே – கிருஷ்ணன் என்றும் – புராணங்கள் பெருகியதால் – முல்லைநிலக் கண்ணனை வழிபடும் தனித்தன்மையை இழந்தனர்.
அதே போன்று , குறிஞ்சி நிலத்து வேட்டுவத் தலைவன் முருகன் – சுப்பிரமணியனாகவும், கார்த்திகேயனாகவும் கதைகளால் பிணைக்கப்பட்டதால், தென்னாட்டு முருகனின் தனித்தன்மையும் மறைந்தது. மேலும் பழந்தமிழ் மக்கள் வழிபட்ட தெய்வங்கள் பலவற்றைக் குறித்தும் (அவை முன்னர் வாழ்ந்து மறைந்த தமிழரின் முன்னோர் என்பது மறைக்கப்பட்டு) புராணப் பின்னணி உருவாக்கப்பட்டது. கற்பனையான தலபுராணங்கள் வரையப்பட்டு, வழிபட்ட தெய்வங்களின் பெயர்களும், ஊர்ப்பெயர்களுங்கூட வடமொழிப்பெயர்களாகத் திரிக்கப்பட்டன.
தமிழ்மக்களிடம் ஊறி இருந்த – தெய்வ நம்பிக்கையே இவை பற்றிய உண்மைகளைத் தெளியும அறிவை இழக்கச் செய்தது. மக்கள் தெய்வங்களை நம்பினர். தெய்வப் பெயர்களும், செய்திகளும் திரிபடைந்தாலும் அவற்றையும் நம்பினர். தெய்வங்களின் பெயரால் அவதாரம் என்றும், அற்புதம் என்றும், தனை நம்பாவிடில் பாவம் என்றும் பேசிய சூதினையும் நம்பினர். இவற்றின் மூலம் வேதம், வேதமொழி சமஸ்கிருதம், அது தேவ பாஷை, அதுவும் பூதேவர்க்கே சொந்தம் என்பதையும் நம்பினர். அந்த வடமொழியில் உள்ளது யாவுமே ‘மந்திரம்’ அவை ஆற்றல்மிக்கவை. ஆண்டவனை அழைக்க வல்லவை. அது நம்மவர் படிக்கவும் கேட்கவும் கூடாது; கேட்டால் நரகம் சேருவர் என்பதையும் நம்பினர். ‘வேதங்க்கத் தெய்வங்கள் கட்டுப்பட்டவை. வேதங்கள் பிராமணருக்குக் கட்டுப்பட்டவை என்பதை நம்பத் தலைப்பட்ட மக்களுக்குப் பிராமணர்கள் – பூதேவர் ஆயினர். பூதேவர்கள் – கண்கண்ட தெய்வமாக, தெய்வங்களிலும் மேம்பட்டவராக எண்ணப்பட்டதுடன், பூதேவர் அல்லாதாரின் வழிபாட்டுக்கும் உரியராயினர்.
ஆரியம் வளர்த்த தீண்டாமை;
ஓரினம் – மற்றோர் இனத்தை அடிமைகொண்ட வரலாறுகளிலே கூட இதைப்போன்ற சூழ்ச்சி வேறு எங்கும் நிகழவில்லை.
கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பால், பல்வேறு கால கட்டங்களில் வடிவு கொண்ட குலப் பெயர்களால்- தனித் தனிப் பிரிவாக வாழ்ந்த மக்களை – மனு நீதி தருமத்தின்படி நாட்டப்பட்ட வருணாசிரமத்தின் சாதிப்பிரிவுக்கு உரியவராக நம்பச் செய்தனர். அதன் பயனாக, வேறு வேறு பிரிவாக இருந்த மக்கள் அனைவரும் ‘பிராமணர்களுக்கு’த் தொண்டு செய்யப் பிறப்பிக்கப்பட்ட ‘சூத்திரர்’ என்ற எண்ணத்திற்கு ஆட்படுத்தப்பட்டனர். தமிழ் மக்களிடையே தாழ்ந்த நிலையில் இருந்த உழைப்பாளிகளான ஆதிதிரவிடர்களை, தீண்டப்படாதவர்களை- பஞ்சமர்கள் எனவும் வகைப்படுத்தினர்.
பிராமணர்களுக்குச் சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களே! சூத்திர்ருக்கும் தீண்டப்படாதவர் பஞ்சமர்! வடநாட்டில் – ஆரிய கலாச்சார ஆதிக்கம் வளர்ச்சியுற்ற தொடக்க காலத்தில் வடிவு கொண்ட பிராமண, சத்திரிய, வைசிய,சூத்திர்ர் என்னும் நால்வகைச் சாதி முறையும்- அதன் உயர்வு தாழ்வும் தென்னகத்தில் அதேபோன்று இடம் பெறவில்லை. இங்கே ஆரியம்- மதகுருமார் வடிவம்கொண்ட பிராமணர்கள் பெற்ற செல்வாக்கின் பயனாக நயாட்டும மக்கள் அன்வரையும் சூத்திரர் எனப் பறைசாற்றியது.
மீளா அடிமைகள் ஆன வரலாறு;
பிராமணியச் செல்வாக்கு முதலில் பல்லவர் ஆட்சியிலும் – பின்னர் இடைக்காலச் சோழர் ஆட்சியிலும் -வேரூன்றி, ஏராளமான சதுர்வேதி மங்கலச் சாசனக் கட்டளைகளுடன் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தலாயிற்று. அதன் தொடர் விளைவாக – குறுநில மன்னர், நிலவுடைமையாளர், செல்வர், வாணிகர் மதலானோர் பிராமணியத்தை ஏற்கும் நீல் வளர்ந்து, வருணாசிரமக்கேடு கால்கொண்டு, மற்ற மக்கள் (உழைப்பாளிகளும், உழவர்களும்) அதனை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதன் சூதான விளைவை அறியாமலே அதனை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
மக்களின் தெய்வ நம்பிக்கையையே ஏதுவாக்க்கொண்டு – அந்த மக்களின் தெய்வங்களின் வரலாற்றேயே திரித்துப் பெயரையும், வழிபாட்டு முறையையும் மாற்றித் தாமே அர்ச்சகருமாகி, மதக் குர்மார்களுமாகி, அந்த மக்களின் தன்னிகரற்ற மொழியையும் தாழ்த்தி ஒதுக்கி இழிவுபடுத்தித் – தமது இனமொழியான வடமொழியை உயர்வாக்க் கற்பித்து, ஆதிக்க மொழியாக்கி, மற மக்களையும் இழிபிறவிகளே என்று நம்ப வைத்து, தெய்வபக்தியில் தம்மை மறந்த தம்மினர் அறியாத ஏமாளிக் கூட்டமாக ஆக்கி, ஒருவகை அடிமை மனப்பான்மையில் ஊறியவர்களாக மாற்றிவிட்ட வரலாறுதான், ஆரிய – திராவிடக் கலாச்சார உறவு விளைவித்த வரலாறு என்பது உயர்ந்த பண்பாட்டில் நிலை பெற்றிருந்த தமிழர்களை, கற்பனையாகப் பிறவி இழிமக்கள் ஆக்கப்பட்டு – மீளா அடிமைகளாயினர்.
அதனால்தான் பிறிதோர் இன்த்துடன் கலைப்பண்பாட்டுத் தொடர்பு ஏற்படும் காலத்திலும் – அதைத் தொடர்ந்தும் வளர்ந்திருக்க வேண்டிய தாய்மொழிப்பற்றும், இன உணர்வும் மங்கி, மறைந்து போயிருப்பதைக் காண்கிறோம்.
வேற்றுமை வளர்ந்தது;
”வைதிக மதவழிப்பற்று” – ஆரியத்தைப் பிரித்துக் காணும் ஆற்றலை (சிந்தனையை) இழக்கச் செய்தது.
”வருணாசிரம – மனுதர்ம நெறி” தமிழர்களை ஒன்றுபட முடியாத அளவுக்குப் பிரித்து வைத்ததுடன், குலத்தையே சாதியாக நம்பிப் பேதம் ‘வளர்க்கச் செய்த்துடன் , ‘இழிபிறவி’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களான – தம்மினும் இழி பிறவியாக பஞ்சமர்களைக் கருதச் செய்த்து. வரலாற்று அடிப்படையில் கூறப்படும் ஒரு செய்தி- ஆரிய மதச் சாத்திர சாதி எண்ணங்களை அடியோடு ஏற்க மறுத்தவரே, தீண்டப் படாதவராக ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் என்பவராவார்.
வரலாற்று அடிப்படையில் – ஒரு தனி இனமாக, தனி நாட்டுக்குரியநவராக, தனி ஆட்சி நடத்துபவராக, தனி மொழி, கலை, நாகரிகம், இலக்கியம், இலக்கணம், வாழ்க்கை நெறி,(அறம் கொண்டவராக, வேற்று இனமொழி, மத ஆதிக்கத்திற்கு இடமில்லாமலே ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்புவரை வாழ்ந்த தமிழ் மக்கள்தாம், இன்று தமிழ்மொழி அடையாளம் ஒன்றைத் தவிர – வேறு அடையாளங்களை வெளிப்படையாக்க் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளனர். மக்களின் தெய்வ வழிபாட்டை வடமொழி மூலம் புரோகிதர் நடத்தும் நிலையை உருவாக்கினர்.
ஆதிதிராவிடர் யார்?
பல்வேறுபட்ட குல (கூட்ட) மக்களாக வாழ்ந்த நிலையை ஏதுவாக்கி வருணாசிரமக் கொள்கையைப் புகுத்தி -தமிழர்களை சூத்திர்ர்களாகவும், பஞ்சமர்களாவும் தாழ்த்திடும் நிலையை உருவாக்கினர்.
ஆரியக் கலாச்சாரத்தினைப் பரப்பியவர் ‘எசமானர்’ நிலை பெற்றனர். வழிவழி வந்த தமிழ்மொழியும் மக்களும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். வடமொழிக்குத் தரப்பட்ட ஏற்றமும், அதைத்தமிழர்கள் ஏற்றுக்கொண்டதும், தமிழ் மொழியைத் தாழ்த்தியதால் – அம்மொழிக்குரிய மக்கள், தமது அடிமை நிலையை இயல்பானதாகக் கருதி, அதற்கு உடன்பட்டு வாழ வழிசெய்தது.அதனால் தன்னம்பிக்கை இழந்த தமிழர்கள் தலைநிமிர மிடியாத நிலையநில் தள்ளப்பட்டனர்.
தமிழர்களிடையே அறநெறியை வலியுறுத்தி, அன்புடைமை, பண்புடைமை, நன்றியுணர்வு, ஒப்புரவு, பிறவிச்சமன்மை, தோழமை, ஆன்ம நேயம், சமரச சன்மார்க்கம் ஆகியவை குறித்து ஆன்றோரும், சான்றோரும் அறிவுறுத்தி வந்த போதிலும், அவற்றை ஏற்றுப் பின்பற்றுவதற்கான உறுதியும் தெளிவும் இன்மையால் வைதிகத்தில் மயங்கிக் கிடக்கின்றனர்.
தன் அழிவை உணராத தமிழன்;
சங்கப்புலவர்களும், திருவள்ளுவரும், சித்தர்களும் வள்ளலாரும் விளக்கிய மனித இன மாண்புகள், சமுதாய வாழ்வில் இடம் பெறவோ, வெற்றி பெறவோ இயலவில்லை. வடலூர் வள்ளலார் ,’கடைவிரித்தேன், கொள்வாரில்லை – விடை கொண்டேன்’ என்று கூறி மறைந்துவிட்டார் என்றால், அதுகாறும் கூறப்பட்ட அவர்து அறிவுரைகள் எடுபடவில்லை என்றுதானே பொருள்?
இந்நிலை ஏன்? எதனால் விளைந்தது? தமிழர்கள் அறிவற்றவர்களா? பண்பற்றவர்களா? இரக்கமற்றவர்களா? பிறர் நலனை மதிக்காதவர்களா? கடவுள் பற்று அற்றவர்களா? இருந்தும் ஏன் சாதி வேற்றுமையும், சமயப்பற்றின் வழி எழும் பகையும் வளர்ந்தன? நியாய உணர்வு, பொது நீதி, ஏன் வெற்றி பெறவில்லை?
தமிழன் தனது மரபு காக்கும் இலக்கியங்களில் பற்றுக் கொள்ளாது,வடமொழி வழிப்பட்ட இதிகாச புராணங்களிலும், பற்றுடையவனானதால் – தன் தனித்தன்மையைக் காத்துக் கொள்ளாதவனாயினான். நாளடைவில் அவற்றை அறியாதவனும் ஆயினான். அவற்றை அறிந்தாலும் வைதிக மத -புராணக் கற்பனைகளிலிருந்து பிரித்துக் காண முடியாதவனாயினான்.
‘கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலையெனக்கொண்டாடும், கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்’ என்னும் வள்ளலார் வாக்கினைப் புரிந்து கொள்ளவும் இயாலாதவனானான். ஏன்? தன்னை ஓர் இனத்தவன் என்றும், தனக்கென ஒரு மொழி – இலக்கியம் – மரபு- நாகரிகம் உண்டெனவும், அதற்கு மாறானவற்றை, எந்த வடிவில் வந்தாலும் ஏற்பது தனது இன அழிவுக்கு வழி செய்வது எனவும் உணராதவனாகவே ஆகிவிட்டான்.
ஆரிய செல்வாக்கின் வழிவந்த கலாச்சாரம் ஒருவகையிலும், மத நம்பிக்கைகளின் வழிப்பட்ட பகுத்தறிவுக்கு இடமற்ற சூழல் ஒரு வகையிலும் – தமிழனைத் தன் இனத்தை எண்ணிப்பாராத நிலைமைக்கு ஆளாக்கின.
எண்ணத்திற்கு மாட்டப்பட்ட தளைகள்;
நீண்ட பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே நிலத்தில் வாழ்ந்திருந்த பழமையும் – மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் இன உணர்வு கொள்ளதற்கான தேவையும் வாய்ப்பும் இன்றையும், அதன் விளைவாய்த் தமிழ் மண்ணில் தமிழன் ஆட்சிக்கு மாறாக வேற்றின ஆட்சி ஏற்படாலாகாது என்னும் எண்ணம் வேரூன்றாமையும், தமிழினத்தை உணர்வு மங்க வைத்திருந்த நிலையில், வைதிக மத வழியால் தனித்தனைம் இழந்ததும்- நாளும் வலுப்பெற்ற சாதி முரண்பாடுகளால் ஒற்றுமை கொள்ள முடியாநிலை உற்றதும், மூட நம்பிக்கைகளை இறுகிக் போனதால், மறுவுலக வாழ்வையே எண்ணும் மனப்பழக்கத்தால் இவ்வுலக வாழ்வில் இழக்கும் உரிமைகளை உணர முடியாமையும் ‘தமிழனை’ மாற்றாரின் ஆதிக்கத்தை உணராமலே அதனை ஏற்று மண்டியிடச் செய்துவிட்டன.
தமிழன் – இன்னோர் இனத்தவன் இவனைப் பிரித்து அடையாளம் காட்டி – கொடுமைப்படுத்தத் தலைப்படும் போதுதான் கொடுமையிலிருந்து மீள்வதற்கு வேறு வழியற்ற, துணையற்ற நிலையில், ‘ஓகோ, நாம் தமிழர்’ என்று எண்ண முற்படுகிறான். அதுவரையில் அவன் மனிதர் பலரிடையே ஒரு மனிதன். அந்த மனித்த் தனைமையைக் காத்துக்கொள்ள இடமில்லாத சூழ்நிலையாயினும் அதனை உணரமாட்டாதவன் உரிமை வாழ்வின் பயனை அவனால் மதித்தறிய முடிவதில்லை.
ஒரு வகையில் அடிமைகளாய் விலைக்கு வாங்கப்பட்ட ஏவலர்கள் – அந்த அடிமை நிலையை உணர்ந்து உள்ளங்குமுறுவதற்கு ஏதுவாக இருந்த அந்தத் தெளிவுங்கூடத் தமிழனுக்கு இல்லை.
கையில் விலங்கு – கால்களில் தளை- அடைப்பட்டிருக்கும் இடமோ கொட்டடி, ஆண்டையின கையிலோ சவுக்கு, அடிக்கும்போது எதிர்தாலோ உயிரும் பறிக்கப்படும என்னும் நிலைக்கு ஆட்பட்டிருந்த ‘கருப்புநிற மக்கள்’ எல்லாம, எத்தனையோ போராட்டங்களில் ஈடுபட்டுப் பெரும்பகுதியினர் விடுதலை பெற்றுவிட்டனர்.
அப்படிப்பட்ட விலங்கும் – தளையும் கண்ணுக்குத் தெரியும்படிப் பூட்டப்படவில்லையே தவிர, தமிழனின் எண்ணத்தில் – கருத்தில்- சிந்தனையில் மாட்டப்பட்டுள்ள தளைகளே – சாதி உயர்வு தாழ்வு, வைதிகச்சடங்கு, வடமொழி ஆதிக்க நிலை, அதன்வழி வளர்ந்த மூடநம்பிக்கைகள். அதனால்தான் தமிழனுக்குத் தன்னையே அடையாளம் காணமுடியாத கருத்துக் குருடாகும் நிலை ஏற்பட்டது. அந்த நிலை இன்றும் மாறவில்லை.
தந்தை பெரியார் வந்தார்!
இவற்றையெல்லாம் – பல்வேறு வகைகளில் – பல்லாண்டு காலம் எண்ணிப்பார்த்துத் , தாமறிந்த உண்மைகளை மற்றவர்களும்அறிந்தாகவேண்டும் என்று தீர்மானித்து, அந்தப் பணியைவிடத் தமது வாழ்நாளில் தாம் செய்ய வேண்டிய பணி வேறு இல்லை என்னும் முடிவுக்கு வந்து, ‘தீண்டாமைக் கொடுமை’ , ‘சாதி’, வருணதரும்ம்’, ‘வைதிகம்’ , ‘வடமொழி ஆதிக்கம்’, ‘புராணங்களை’, ‘மூடநம்பிக்கைகள்’, ஆகியவற்றை நோறுக்குவதற்கான சம்மட்டியாகச் சுயமரியாதை இயக்கத்தை’த் தொடங்கிப் பகுத்தறிவு பரப்பும் பணியில் ஈடுபட்டார் தந்தை பெரியார் அவர்கள். அந்த நோக்கம் நிறைவேறப் பலமுனைத் தாக்குதலும், பல்வேறு கோண்த்திலான விளக்கங்களும் தேவை என்று தெளிந்த பேரறிஞர் அண்ணா அவர்களை – தமது சிந்தனை திறன்மிக்க பேச்சாலும் – எழுத்தாலும் – கலைப்பணியாலும் துணைநின்றார்கள்.
இருபது நூற்றாண்டுகளாகவே மெல்ல மெல்ல உருக்குலைந்து, உள்ளமும் கெட்டுப்போன தமிழினத்தைத் ‘தன்மானம்’ கொள்ளச் செய்வதும் – ‘பகுத்தறிவு’ தனைப் பயன்படுத்தச் செய்வதுமே – இழந்த மனிதத் தனைமையை உணரச்செய்யும் வழி என்றும், அப்படிப் பெறும் விழிப்புணர்ச்சியால் அவன் தமிழன் (திராவிடன்) என்னும் உணர்வு பெறலாகுமென்றும் தெளிந்தவர் சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார் அவர்களே ஆவர்.
கடுங்காய்ச்சல் தீரும் மருந்து கொடுத்தால் – வாய் உளறுதலும் நிற்கும் – வாய்க் கசப்பும் மாறும், நிதானம் வந்தபின் எதிரிலுள்ளோர் புலனாவர் என்பதற்கிணங்கவே தமிழினத்தின் வைதிக வழிபட்ட காய்ச்சல் நீங்கும். கடுமையான மருந்தாகத் தான் சுயமரியாதை – பகுத்தறிவு இயக்கம் தந்தை பெரியாரால் காணப்பட்டது. அந்த மருந்தினை இனிப்பில் வைத்து விழுங்கச் செய்யும் முறையை மேற்கொண்டவரே அறிஞர் அண்ணா அவர்கள்.
எனவே, தமிழினத்தின் வரலாற்றில் காண்ப்படும் அடிப்படை வீழ்ச்சியை – தாழ்நிலையை – அடிமை மனப்பான்மையை மாற்ற விரும்பும் எவரும், தன்மானப் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்புவதன் மூலம் தமிழர்களைத் தம்மை உணர்ந்தவர்களாக ஆக்கிடும் பணியையே தலையாய பணியாக உணர்ந்து மேற்கொண்டாகவேண்டும். எதிர்ப்புகள் எத்தனை வந்தாலும், எப்பக்கமிருந்து வந்தாலும், எதற்கும் அஞ்சாது, ஏன்? எப்படி? எதற்கு? என்னும் கேள்வியை எழுப்பி விடைகாணும் ஆற்றலை – நம்மினத்தார் பலரிடமும் உருவாக்கிய தந்தைப் பெரியாரின் தொண்டே – தமிழர்களை விழிப்புறச் செய்யும் வழி கண்ட தலையாய தொண்டாகும்!
நூறாண்டு வாழ்ந்தவர்;
தன்மானத் தந்தை, சுயமரியாதைச் சுடர் பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை இன்று அவர் பாசறையிலே பயிற்சிபெற்ற நமது இயக்கத்தவர் மட்டுமேயன்றி, அவரால் வாழ்வு பெற்ற நாடும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ நூறாண்டு வாழ்ந்தவர்தான் பெரியார். ஆனால், மற்றவர்களைப் போலன்றித் தாம் வாழ்ந்த காலத்திலே தமது முத்திரை பதித்துச் சமுதாயத்தின் வாழ்வில் பதியவைத்து விட்டவர் பெரியார்.
அவர் வாழ்ந்தார் என்பது ஒரு செய்தி அன்று . இலக்கியத்தில் – காவியம் – வரலாறு எண்ணப்படுவது அன்று- நம்முடைய வாழ்வாக சமுதாயத்தின் புதுவாழ்வாக மதிக்கப்படுவது.
மனிதராக்கியவர்:
நம்மிடையே ஒரு பெரிய மனமாற்றத்தை, விழிப்புணர்ச்சியைப் புதிய சிந்தனையைத் தலைநிமிர்ந்து நிற்கும் ஒரு தன்மதிப்புத் தகுதியை, ஏற்படுத்தியவர் பெரியார். சுருங்கக்கூறின், நம்மை ‘மனிதன்’ ஆக வாழச் செய்தர் – வாழும் வழி காட்டியவர் பெரியார்.
ஆம்! பெரியார் வாழ்ந்தார்! அவர் வாழ்ந்ததால் நாம் ‘மனிதன்’ ஆனோம்! திராவிடர் ஆனோம்! வரலாற்றுப் பெருமை உள்ள ஒரு நாட்டவர் ஆனோம்!
பெரியார் பிறக்காவிடில், ஆம், அவர் வழிப் பிறந்த எண்ணங்களும், கேள்விகளும், கண்டனங்களும் பிறக்காதிருந்தால் – இன்றும் நாமெல்லாம்:
பொட்டுப் பூச்சிகளாய்,
புன்மைத் தேரைகளாய்,
பகுத்தறிவைப் பயன்படுத்தாப் பதர்களாய்,
நம்மை நாமே உணராத ஒரு ‘கும்பலாக’,
அடிமை உணர்வகலாத் தொழும்பர்களாய்,
‘சாமி’ என்றும், ‘ஐயர்’ என்றும்
யார் யாரையோ வணங்கிக் கிடக்கும்
செயலற்றுப்போன எலும்புக் கூடாக,
சமுதாயத்திற்குப் பயன்படாத ஒதிகையாக,
உதவாக் கரையாக, அறிவுக் குருடர்களாய்
தீண்டப்படாப் பிறவிகளாக-
ஆளடிமைகளாக, அவமானச் சின்னங்களாகத்தான்
இருந்திருப்போம் இருட்டறையில்!
நாட்டிற்கே ‘சுதந்திரம்’ வந்தாலும் நம் சிந்தனைக்குச் ‘சுதந்திரம்’ கிடைத்திருக்காது. ”இருட்டறையிலே உள்ளதடா உலகம் – சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே” என்னும் புரட்சிக் கவிஞர் கூற்றுப்படிதான் இருட்டறையில் இருந்திருப்போம்!
”இருட்டறையில் ஏதில் பிணம் தழீஇயற்று” என்று வள்ளுவர் காட்டிய உவமைக்கு ஒப்ப, பொருளுக்காகவே புரோகிதர் ஆற்றக்கூடிய சடங்குகட்கெல்லாம் நாம் ஆட்பட்டவராகவே இருந்திருப்போம்!
ஏதில் பிணம் எனலாகும் வடமொழி தழுவலில் இருந்து தமிழர்களை யாரும் விடுபட்டிருக்கவும் மாட்டோம்!
துணிவு பிறந்திருக்காது:
வருணாசிரம உயர்வு தாழ்வு; பிறப்பினில் வேற்றுமை; தீண்டாமை; வைதிகப் பிடிப்பு; மத ஆதிக்கம்; சாத்திரச் சம்பிரதாய வழக்குகள்; இதிகாச புராண நம்பிக்கைகள்; பெண்ண்டிமை; உழைப்புக்கு இழுக்கு; தலைவிதி தத்துவம் முதலான எத்தனையோ வைதிகப் உணர்வுகளை எண்ணிப் பார்ப்பதற்கான துணிவு கூடத் தமிழ் மக்களிடையே பிறந்திருக்காது.
நமது எண்ணங்களை, நம்பிக்கைகளை, நடைமுறைகளை சடங்குகள் முதலான எதைப்பற்றியுங்கூட எண்ணிப் பார்பதற்கான தூண்டுதல் ஏற்பட்டிருக்காது – துணிவு பிறந்திருக்காது.
எதைக் கண்டும் அஞ்சிய கோழையாக, மோழையாக, எதைக்கேட்டும் அடங்கிய ஆமையாக, ஊமையாக இருந்தவர்களை தம் கண்களை விரித்து உண்மையைத் தேடிக் காணும் முயற்சி உடையோரானது பெரியாரால் அன்றோ!
உள்ள உரந்தந்தார்!
பேய், பூதம், பிசாசு எனக் கேட்டு அஞ்சும் சிறுவரைப் போன்று, கடவுள், மதம், படைப்பு, விதி என்பதைக் கேட்டு அஞ்சிய பெரியவர்களையும் சிந்திக்க வைத்தவர் பெரியார்.
காலமெல்லாம் உழைத்துப் பாடுபட்டு இந்த உலகை – நாம் வாழத்தக்கதாக உருவாக்கியவன் மனிதன். அதில் ஏய்த்துப் பிழைப்போருக்கு இடமின்றி -அறிவால் முயற்சியோடு முன்னேறுவதே நமது கடமை என்று உணர்த்தியவர் பெரியார். உடலுக்கு ஒவ்வாத உணவை ஒதுக்குவது போன்று, உலக வாழ்வுக்குப் பயன்படாத எண்ணங்களை -அவற்றின் பிடிப்பை உதறி எறிய அறிவுறுத்தியவர் பெரியார்.
இயற்கை அறிவால் தெளிவு பெறல்:
அப்படிப்பட்ட இயற்கை அறிவால் உலகைத் தெளிந்து, புதிய பாதை வகுத்த பெரியார் அவர்கள் பிறந்த குடும்பமோ – பழமையில் ஆழ்ந்த பற்றுக்கொண்டது. வாணிகத்தில் பொருள் ஈட்டி, வைதிகச் சடங்குகளில் செலவிட்டு, மத நம்பிக்கைகளில் ஊறி, சாதி ஆசாரத்தில் திளைத்து, தரும காரியங்களில் ஈடுபட்டிருந்த பெருமைக்குரியது.
சிறுவயிதிலேயே பெரியவர்களை சொல்லிலும் செயலிலும் பெரியாருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. மாறாக இது ஏன்? அது எதற்காக? இப்படிச் செய்யாவிட்டால் என்ன? இதனால் என்ன பயன்? என்னும் கேள்விகள் அவரிடம் பிறக்கலாயின. ஏன்? எப்படி? எதனால்? என்னும் கேள்விகள் அவரைச் சிந்திக்க வைத்தன.
பெரியவர்கள் பழக்கத்தால்தான் எதையும் நம்புகிறார்கள். அப்படி நம்புவதற்கு ஆதாரம் அவர்களுக்கு முன்னாலே அவர்களுடைய பெரியவர்கள் நம்பினார்கள் என்பதுதான். அதுவேயன்றி அவர்கள் தாமாக எதையும் சிந்தித்து – ஆராய்ந்து முடிவிற்கு வரவதில்லை என்று அவர் கண்டார். அவர் தம் கேள்விகட்குத் தகுந்த பதிலையும் அவர்களிடமிருந்து பெரியார் பெற முடியவில்லை.
எதிர்மறை வினாக்கள் எழுப்பினார்:
உலகத்தில் மேற்கு நாடுகள் பலவும் அறிவியல் புதுமைகளைக் கண்டு, மக்கள் வாழ்க்கையை வளப்படுத்தி நாளும் முன்னேறி வருகின்றனவே; நாம் மட்டும் முன்னேற வில்லையே? என்ன காரணம்? என்று எண்ணிப் பார்க்கலானார். நம்மிடையே நிலவிய விஞ்ஞானக் கரு, புதுமை காணும் முயற்சி – ஆயிரம் இரண்டாயிர்ம ஆண்டுகட்கு முன்னரே நின்றுபோய் விட்டது. அபடி நின்றுபோகும் வண்ணம் மனித முயற்சியைக் குலைக்கவும் – குன்றவும் செய்யக்கூடிய எண்ணங்கள் அவர்தம் உள்ளத்தில் நிரப்பப்பட்டன. வைதிக ஆரியத்தால் – என்பதையும் தெளியலானார்.
மனித வாழ்க்கைமுறை யாவும் அன்றாட வாழ்க்கையாயினும் – சிறப்பு நிகழ்ச்சிகளாயினும் வேறு எவையாயினும் அவருடைய எதிர்மறைக் கேள்விகளுக்கு இலக்காயின.
குளிப்பது, உடுப்பது, உண்பது, உறங்குவது முதல்- தொழுவது, விழா எடுப்பது, கோயில் கட்டுவது, கொண்டாட்டம் நடத்துவது ஆகிய அனைத்தும்- அவரது ஆய்வுக்கு ஆட்பட்டன. குளிப்பது அழுக்குப் போகத்தானே? குளிப்பவர் எல்லாம் அழுக்குப் போகவா குளிக்கிறார்கள்? நாளும் குளிக்காவிட்டால்தான் என்ன? துணி உடுத்துவது – ஒரு நாகரிகம் ஆகி ஆடம்பரமாகத்தானே ஆகிவிட்டது! பலருக்கு எளிய உடை உடுத்தினால் போதாதா? பெண்கள் பதினெட்டு முழப் புடவையைச் சுற்றுவது எதற்காக? குறைத்து உடுத்தினால் அவர்கட்கு நன்மையல்லவா? பெண்கள் அழகுபடுத்திக்கொள்வது அவர்களை அடிமைப்படுத்தத்தானே பயன்படுகிறது? ஒரு நாளைக்கு வீட்டுக்கு வீடு எத்தனை முறை உணவு தயாரிப்பது? இது பெண்கள் சுதந்திரத்தையே கெடுக்கிறதல்லவா? ‘பண்டிகை’ என்பது வகை வகையாக உண்பதற்குத்தானே? அதற்கேன் இவ்வளுவு உழைப்பு, முயற்சி, வீண் செலவு?
திருவிழாக்கள் என்பது சிலபேர் பிழைக்க – பலபேர் ஏமாற்றப்பட வழி செய்வதுதானே? ‘கோயில்’ என்பது குருமார்கள் வாழ; மற்றவர்களை அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி கிடக்கத்தானே? ஆண்-பெண் இரு இனத்தில் பெண்ணினம் கருவுற்றுப் பிள்ளை பெற்றெடுக்கும் இயற்கை உடையது. அதற்காகப் பிள்ளை பெற்றெடுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா? அதை நிறுத்திக் கொள்ளும் வழியும் உரிமையும் அவர்கட்கு ஏன் இல்லை? என்று எண்ணிச் சிந்திக்கலானார்.
அநீதி கண்டு கொதித்தார்:
மனிதரில் மேல்சாதி – கீழ்சாதி என்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது? ஏன் பிறந்தது? எப்படி நிலைத்தது?
மனிதரில் ஒரு சாரார் – நகத்தில் அழுக்குப்படாமல், உழைக்காமல் உண்டு களிக்க, இன்னொரு சாரார், கடின உழைப்பை ஏற்றும், சமுதாயத்திற்கு இன்றியமையாத இழி தொழில் செய்தும் – கஞ்சிக்கும் வழியின்றிப் பரம்பரை – பரம்பரையாக நொந்து போவதும் ஏன்? இந்த அநீதி இன்னுமா நீடிக்க வேண்டும்? என்று கொதிக்கலானார். இவற்றை நிலைநிறுத்துவது மத நம்பிக்கையல்லவா? அந்த மத நம்பிக்கைகளை மாற்றினால்தானே இவை மாறும்! அநீதியைத் துடைக்க மத – சாதி நம்பிக்கைகளை அகற்ற வேண்டுமெனில் – அவற்றை எதிர்ப்பது தவிர வேறு வழி என்ன? என்ற எண்ணத்தை மேற்கொண்டார்.
பிறப்பால் பேதம் கற்பித்தல்,
மத்த்தால் மூட நம்பிக்கை வளர்த்தல்,
வைதிகத்தால் சடங்குகளைச் செய்தல்,
இதிகாச புராண சாத்திரங்களை நம்புதல்,
புரோகித்த்தின் செல்வாக்குக்குப் பணிதல்,
வடமொழிக்குத் தனி மகிமை அளித்தல்,
இப்படிப்பட்ட ஒவ்வொன்றையும் அதன் வேரோடும் வேரடு மண்ணோடும் கல்லி எடுத்து ஒழிப்பதிலே – அதற்கான மனமாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்திவதிலே பெரியார் ஆர்வங்கொண்டார்.
எதிரம்புகளை நிலைகுலையச் செய்தார்:
மத்த்தைக் குறித்துப்பெரியார் எப்படி எண்ணலானார் என்பதை அவரது – தொடக்கக் காலப் பேச்சிலே நான் காணலாம்.
”மதம் என்பது நாட்டிற்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு மனிதனுக்குஓ, எதற்காக இருக்கவேண்டியது? ஒரு தேசத்தையோ,சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப் படுத்துவதறகாகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்தக்கூடியதா? மனிதனுக்காக மதமா? மத்த்துக்காக மனிதனா? என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
”மதம் என்பது மனிதனின் (சமூக) கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்திற்கும் ஏற்ற விதிகள்ளைக் கொண்டதேயாகும் என்று சொல்லப்படுமானால், அம்மாதிரி மதங்கைப்பற்றிச சுயமரியாதை இயக்கம் (எதிர்ப்புக் காட்ட வேண்டும் என்று) அதிகம் கவலைப்படுவது கிடையாது. அதற்கு, இயக்கம் அவசியமானால் உதவியும் செய்யும். மற்றும் மனிதன் ஆத்மா என்பது கடவுள் என்பதை அடைவதற்காக மதம் ஏற்பட்டது என்றால் அதைப்பற்றிச் சுயமரியாதை இயக்கம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட எணமுடையவனும், அவனுடைய மதமும் இப்போது எப்படியோ போகட்டும் என்றை விட்டுவிடுவோம். ஏனெனில், அது தனிப்பட்ட மனிதனைப் பற்றிய காரியம். ஆனால், மனித சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும், மக்களைப் பிரித்து வைத்து, உயர்வு தாழ்வு கற்பித்து, மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்துப் பொது முன்னேற்றத்தையும் சுதந்திரத்தையும் தடுக்கும்படியான மதம் எதுவானாலும் அதை ஒழிக்கச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்கிறது.
இவ்வாறு, சமுதாயப் போக்கு என்னும் வலிவான வெள்ளத்தினை எதிர்த்து, எதிர் நீச்சலிலே ஈடுபட்டவர்தான் பெரியார். அஞ்சாமல், சளைக்காமல், அலுக்காமல், அயராமல், எதிர்நீச்சல் போட்டவர் – ஓர் அறுபது ஆண்டுகட்கு மேலாகவே எதிர்நீச்சல் போட்டவர் பெரியார் ஒருவர்தான்.
அதனால்தான், ஆதிக்கவாசிகள், வைதிகர்களை, பழமை விரும்பிகளை எல்லோரும் பெரியாரை எதிர்த்தனர், ஏளனம் பேசினர். கண்டனஞ் செய்தனர். பெரியாரின் பேச்சும் எழுத்தும் நாட்டிலே இடம்பெறவே கூடாது என்று திட்டமிட்டனர். அறியாமைக்கு ஆட்பட்ட மக்களூம் அவர்களைக்குத் துணை நின்றனர். ஆனால் – எதிர்ப்பு வளர வளரப் பெரியாரின் ஆர்வமும், உறுதியும் துணிச்சலுமே வளர்ந்தன.
மாற்றார் மருட்சி:
வகை வகையான எதிர்ப்பு வந்தபோதெல்லாம் பெரியார் அவர்களை, தமது பணி பயன்படத் தொடங்கிவிட்டது; அதனால் தான், மாற்றார் மருண்டு, தமது சுயநலம் பறிபோய் விடுமே என்று கூச்சலிடுகின்றனர் என்று கணக்கிடலானார். எனவே, எதிர்ப்பு- ஒரு வகையில் அவரை ஊக்க்ப்படுத்தியது எனலாம்.
பெரியார் அவர்களை மற்றொரு வகையாலும் தமது இலட்சியப் பணிக்குத் தம்மை தயார் செய்துகொண்டார். படித்தவர்களை பாராட்டு, அறிவாளிகள் ஆதரவு, பெரும்பாலோர் ஒத்துழைப்பு, எல்லோரும் பாராட்டும் புகழ் ஆகியவற்றைப் பொருட்படுத்தினால் – தமது நோக்கம் சீர்குலையும் என்று தீர்மானித்துக்கொண்டு தம் கருத்தை ஏற்போர் ஏற்கட்டும், ஏற்காதவர்களை யாரானால் நமக்கென்ன? என்ற எண்ணத்துடன் நடைபோட்டார்.
புது வழி கண்டவர்:
அவரைப் பொருத்தவரையில் இது அவருடைய கடமை; வாழ்க்கைக் குறிக்கோள்; விளைவு பற்றிக் கவலை இல்லை. இதிலேதான் அவருக்கு மகிழ்ச்சி; மனநிறைவு. அவரே கூறியது போன்று, ”மயிரைக் கொண்டு கட்டி மலையை இழுக்கிறோம்ந மலை வந்தாலும் சரி; மயிர் போனாலும் சரி” – என்ற மனப்பான்மையோடுதான், இவ்வளவு பெரிய எண்ணப் புரட்சியில் தம்மை ஒப்படைத்துக்கொண்டார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் – தமிழ் மக்களின் எண்ணத்தில் புதுமையைக் கலந்தவர் உண்டு; புதுப்புது இலக்கிய விருந்துகளைப் படைத்தவர் உண்டு; சீர்திருத்தத்தைச் செப்பியவர் உண்டு; சமரச சன்மார்க்கத்தை விளக்கியவர் உண்டு; நாத்திக விளக்கம் புரிந்தவர் உண்டு; வைதிகச் சடங்குகளைச சாடியவர் உண்டு – ஆனால் பெரியாரைப் போன்று – பாமர்ர் உட்படத் தமிழர்களின் எண்ண ஓட்டத்திலேயே ஒரு திருப்பத்தை – மாற்றத்தை – மறுமலர்ச்சியை – பழமையை ஒடுக்கும் ஆற்றலை – எதனையும் ஆராய்ந்து பார்க்கும் மனத்துணிவை உருவாக்கிய இன்னொருவர் பிறந்ததில்லை. அறம் உணர்த்தியவர்கள் , நீதி, நியாயம் புலப்படுத்தியவர்கள் பலர். ஆனால், ‘அநீதியை’ எடுத்துக்காட்டி, அக்கிரமத்தை எதிர்த்து வாதாடி, பழைய மதிப்பீடுகளையே மாற்றிப் புதிய மதிப்பீடுகள் பிறக்க வழி செய்தவர் பெரியார் ஒருவரே.
உலகைப்பார்க்க வைத்தவர்:
பழைய எண்ணங்களாகிய பொன் நகைகளின் அழுக்குப் போக்கியவரும் மெருகேற்றியவரும் பலர். அதனை அழித்துப் புது நகையாக செய்தவர் சிலர்; ஆனால், அந்தப் பழைய எண்ணங்களாகிய நகைகளே இல்லாவிட்டால்தான் என்ன? என்று எண்ணிப் பார்க்க வைத்தவர் பெரியார்.
”என் பாட்டன் கப்பல் ஓட்டினார்” என்பது போன்ற பழம்பெருமை மட்டும் பேசி – ஓடம் ஓட்டவும் வழி தேடாது அதனாலேயே நாம் மேலான நிலையினர்போல் எண்ணிக் கொள்ளும், பாலைமணலில் தலை புதைக்கும் நெருப்புக்கோழி மனப்பான்மையை மாற்றித் தலையைத் தூக்கி உலகத்தை எட்டிப் பார்க்க்ச் செய்தவர் பெரியார்.
அறிவுழவு செய்த முதல்வர்;
ஆம்! அப்படிப்பட்ட பெரியாரின் தொண்டு, தமிழகத்தில் பூட்டப்பட்ட ‘முதல் ஏர்’ ஆக அமைந்த காரணத்தால்தான், பேரறிஞர் அண்ணாவின் ‘வழி ஏர்’ -இரண்டாவது ‘ஏர்’ முன்னேற முடிந்தது. முன்னேற்றங்காணவும் முடிந்தது. எனவேதான் , பெரியார் அவர்கள், அண்ணா அவர்களால், ‘என் வாழ்நாளில் நான் மதித்து ஏற்றுக்கொண்ட என் ஒரே தலைவர் பெரியார்’ என்று போற்றப்பட்டார்.
”அறிவில் வயதில் முதியவர் என்றும் வாய்மைப் போருக்கு இளையார்” என்றும் புரட்சிக் கவிஞரின் போற்றுதலுக்கும் பெரியார் உரியரானார். எனவே, பெரியார் அவர்களாலேதான் இன்றையத் ‘தமிழன்’ உருவாகியிருக்கிறான். தமிழனாக உருவாகா, உணர்ச்சி பெறாத் தமிழர்களும் இருக்கிறார்கள் எனினும், பெரியார் இல்லையேல், உணர்ச்சியுள்ள தமிழனே இருந்திருக்கமாட்டான் எனலாம்.
எனவேதான் –
தமிழர் சமுதாய வாழ்வில் ஒரு
விடிவெள்ளியாக,
தமிழர் வரலாற்றில் ஒரு சகாப்தமாக,
ஒரு நூற்றாண்டாக,
தமிழர் எண்ணத்தில் ஒரு சிந்தனைச்
சிற்பியாக,
தமிழர் வாழ்வில் – ஒரு சீர்திருத்த வாதியாக,
தமிழர் இனத்தின் – ஒப்பற்றதொரு
தன்மானக் காவலராக,
தமிழர் உணர்ச்சியில் – ஒரு பெரும்
புரட்சித் தீயாக,
தமிழர் தம் அடிமை மனப்பான்மையை
அகற்றிய ‘விடுதலை’ வீர்ராக
நம்முடைய வாழ்வும், வளமும் சிறந்திட
வழிகாட்டிய இணையற்ற தலைவராகப்
‘பெரியார்’ விளங்குகிறார்!
வாழ்க பெரியார் புகழ்!
வளர்க அவர்தம் இலட்சியம்!

No comments:

Post a Comment